Tuesday, September 1, 2009

தமிழ் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு?

20வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திஸ்ஸநாயகத்திற்குப் பொது மன்னிப்பு வழங்குமாறு வெளிவிகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக வெளிவிகார அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (31) திஸ்ஸநாயகத்திற்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து வெளிவிவகார அமைச்சருக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணமுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன், இந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிகார அமைச்சிற்கு நூற்றுக்கணக்கான தொலைநகல்கள் (ஃபெக்ஸ்) வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

லிபியாவின் 40வது சுதந்திரத் தின விழாவில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர், திஸ்ஸநாயகம் வழக்கின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து விரவாக கலந்துரையாடியுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க வழிசெய்யுமாறு சர்வதேச அமைப்புக்கள் கோரியுள்ளமை குறித்து ஆராயப்படுவதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு இது வழிவகுக்கும் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.

No comments:

Post a Comment