425 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுட்ரீச் இணையத்தளத்தின் பிரதமர ஆசிரியர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (ஆக.31) 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இனவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 2008ம் ஆண்டு மார்ச் 7ம் திகதி திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
திஸ்ஸநாயகம் மீது சுமத்தப்பட்டிருந்த முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்காக தலா 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 10 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவம் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் ஷஅவுட்ரீச்| இணையத்தளத்தில் இரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருந்ததாக சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கட்டுரைகளில், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை விநியோகிக்காமல் மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிப்பதற்காக அரசாங்கப் படைகள் முயற்சிப்பதாக திஸ்ஸநாயகம்
எழுதியிருந்ததாக சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிக்கை செய்தார். இதன்மூலம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாக நீதிமன்றத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் நீண்டதொரு அறிக்கையைச் சமர்ப்பித்து வாதி மீது சாட்டப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்து வாதிட்டார்.
தான் எவ்விதமான வாதத்தை முன்வைத்த போதிலும், திஸ்ஸநாயகத்திற்கு எதிரான தீர்ப்பை நீதிபதி குறித்துக் கொண்டுவந்திருப்பதால் தமது கருத்துக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கூறினார். மேல் மாகாணத்தின் பிரதான நீதிமன்றத்தின் பிரதான நீதவானான உங்களிடம் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்வது என்னவெனில் தண்டனை வழங்கும்போது மனித நேயம் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் ஒரு நியாயத்தை எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் இனவாதியல்ல. அவர் 80ம் ஆண்டு காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும், அவர்கள் சார்பில் கட்டியெழுப்பப்பட்ட அரசியல் தலைமை சார்பிலும், காணாமற்போன பிள்ளைகளின் பெற்றோர் சங்கத்துடனும், அந்தக் காலத்தில் ஊழியர்களின் புரட்சி சார்பிலும் பணியாற்றியதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம், ஜே.வி.பி. மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சார்பாக சேவை அடிப்படையில் முன்நின்று திஸ்ஸநாயகம் பணியாற்றியதாகவும் அனில் டி சில்வா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
போரினால் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலை தற்போது துயரமானது. இவர்களுக்காக ஏதேனும் செய்ய முயற்சித்தால் தாம் கவலைக்கிடமான நிலையைச் சந்திக்க நேரிடும் எனவும் வாதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.
80ம் ஆண்டு காலப்பகுதியில் ஊழியர்கள் சார்பில் குரல் கொடுத்த குற்றத்திற்காக திஸ்ஸநாயகம் தமது தொழிலை இழந்தார். இன்று தமது இனத்தின் சார்பில் குரல் கொடுத்த குற்றத்திற்காக சுதந்திரத்தை இழந்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர், நிரபராதி என்ற தீர்ப்பிற்கு நீதிமன்றம் இணங்கினாலும் இணங்காவிட்டாலும், திஸ்ஸநாயக்கம் ஒருவருடமும் ஐந்து மாதங்களும் விளக்கமறியலில் சட்டவிரோதமான முறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள மொழி மற்றும் கருத்துச் சுதந்திரம் சிங்கள இனத்திற்கு மாத்திரமின்றி, தமிழரான திஸ்ஸநாயகத்திற்கும் கிடைக்க வேண்டுமெனவும், இனவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கு அவர் ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், சிவப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு, உலகத்தைப் பார்க்கும் பொய்யான தேசப்பற்றாளர்களுக்கு திஸ்ஸநாயகம் மாத்திரமன்றி, உலகில் நிகழும் அனைத்தும் தவறாகவே புலப்படும் எனவும் வாதி சார்பில் வாதிட்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிக்கையிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில், திஸ்ஸநாயகம் ஒரு தமிழர் என்பதால் கைதுசெய்யப்பட்டதாகவும், தற்போதைய சூழ்நிலையில், எவருக்கும் எந்த நீதியும் கிடைக்காது எனவும் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக சட்டம் செயற்பட்ட விதமானது ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் நல்லதொரு பாடத்தைக் கற்பித்துள்ளதுடன், இதன்பின்னர் எதனையும் எழுதாமல் இருக்குமாறு ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்க நேரிட்டுள்ளதாகவும் வாதியின் வாதத்தை முடித்துக் கொண்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த ஏராளமானோர் சமுகமளித்திருந்ததுடன், அரசியல்வாதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment