Monday, October 12, 2009

வன்னியில் இருந்து தலைவரால் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தளபதி பால்ராஜ்


மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – பகுதி 02

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய காலப்பகுதியாக 2002ம் ஆண்டின் பின்னான காலப்பகுதி அமைந்துள்ளது. அதாவது சமாதான காலப்பகுதி என்று குறிப்பிடலாம். இந்தச் சமாதான காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகப் பகுதியான வன்னிப் பகுதிக்கு பல்வேறுபட்ட நாட்டுப் பிரமுகர்களின் வருகை, வேற்றின மக்களின் வருகை என்பன அதிகரித்திருந்த அதேவேளையில்தான், விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களின் ஊடுருவல்கள் என்பனவும் அதிகரித்திருந்தன.

இதனை முறியடித்து இவ்வாறானவர்களை கண்டறிந்து இந்த ஊடுருவல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழ் மக்கள் சிலரே இவ்வாறான துரோகத்தனங்களில் ஈடுபட்டிருந்ததால், சந்தேகத்துக்கு இடமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மக்களிடையே சில மனக்கசப்பும் ஏற்படத்தான் செய்தது.

எனினும், தாயகத்தின் பாதுகாப்பு என்ற வகையில் இந்த நடவடிக்கைக்கு பெருமளவு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான சிறீலங்கா அரசின் பொருளாதார தடை தளர்த்தப்பட்டது விடுதலைப் புலிகளும், வன்னி வாழ் மக்களும் பொருளாதார ரீதியான வளர்ச்சியை பெறுவதற்கு சற்று வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

ஆனால், இது மறைமுகமாக தமிழீழ விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் மறைமுகப் பாதிப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறு வன்னி மக்கள் மீதான பொருளாதாரத் தடை, சிறீலங்கா அரசால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள தங்களது நிர்வாக பகுதிகளுக்கும் பொருளாதார தடைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு விடுதலைப் புலிகளால் சிறீலங்கா படையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் எழுந்த அல்லது உருவாக்கப்பட்ட பிரச்சினைதான் மாவிலாற்றுப் பிரச்சினை. சிறீலங்கா அரச படைகளால் மாவிலாற்றில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் மாவிலாற்று நீர்ப் பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்போம்.

இயற்கையின் எழில் நிறைந்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. இயற்கைத் துறைமுகம், விமானப்படைத்தளம், எண்ணை சேமிப்புக் கிணறுகள்… என்று பல நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது காணப்படுகின்றது. விஞ்ஞானியான ஆதர் சீ கிளாக் அவர்கள் கூட, ஆசியாக் கண்டத்தில் திருகோணமலையை முக்கிய இடமாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது செய்மதி ஏவுதளம் அமைக்கக்கூடிய இடமாக திருகோணமலை விளங்குவதாக அவர் கணித்திருந்தார். அதேவேளை, பல்வேறு நாடுகளுக்கும் திருகோணமலையை முதன்மையான இடமாக கருதுகின்றன. இந்நிலையில், திருகோணமலையில் சில இடங்கள் சிறீலங்கா அரசால் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கும் விடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அமையப் பெற்ற இடத்தில் இருந்து கொண்டே விடுதலைப் புலிகள் 2003ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய துரோகத்தனத்தினை களைவதற்காக படை எடுத்து, அதில் வெற்றியும் பெற்றார்கள்.

கிழக்கில் இருந்து விடுதலைப் போராட்டத்தின் துரோகிகள் விரட்டி அடிக்கப்பட்டு பாதுகாப்பான நிலை கொண்டுவரப்பட்டதன் பின்னர் அங்கு விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் மீண்டும் செயற்படத் தொடங்கின. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் தொடக்கம் வெருகல் துறைமுகத்துவாரம் வரையான 50 கிலோ மீற்றர் கரையோரப்பகுதி விடுதலைப் புலிகளின் திறமைமிக்க நிர்வாக பகுதிகளில் ஒன்றாக விளங்கியது.

பல கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் விவசாயத்தையும், கடல் தொழிலையும் தமது தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கல்வியில் சற்று குறைவான நிலையே இங்கு காணப்பட்டது. இம்மக்கள் தமது அன்றாட பொருட்களைக் கூட சிறீலங்கா படையினரின் பிரதேசங்களுக்குள் சென்றே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. சம்பூர் மக்கள் கட்டைபறிச்சான் பொலிஸ் சோதனை நிலையம் ஊடாகவும், ஈச்சிலம்பற்று, வெருகல் கிராம மக்கள் சேருநுவர படை சோதனை நிலையம் ஊடாகவும், கதிரவெளி மக்கள் வாளைச்சேனை படைச் சோதனை நிலையம் ஊடாகவும் சென்றே பொருட்கள் பெறவேண்டும்.

ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களை மாத்திரம் கொண்டு செல்லலாம். பெருமளவு பொருட்கள் எடுத்துச்சென்றால் அவர் படையினரால் சந்தேகப்பட்டு விசாரிக்கப்படுவார். இவ்வாறு அங்குள்ள மக்களுக்கான பொருளாதார தடை சிறீலங்காப் படையினரால் போடப்பட்டிருந்தது. இவற்றின் மத்தியில்தான் விடுதலைப் புலிகள் தமது நிர்வாகத்தை அங்கு நடத்தினார்கள். காட்டுவழியாகவும், கடல்வழியாகவும் பொருட்களைக் கொள்வனவு செய்தே விடுதலைப் புலிகள் தங்கள் நிர்வாகத்தை நடத்தினார்கள்.

அங்கு பல பயிற்சித் தளங்களை நிறுவினார்கள். பலநூறு புதிய போராளிகளை உருவாக்கினார்கள். மறைமுகமாக விடுதலைப் புலிகளின் கடற்படைத்தளங்கள் அங்கு நிறுவப்பட்டன. இதன் பிரகாரம் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதத் தளபாடங்கள் கப்பல் வழியாக திருகோணமலையில் ஒரு தொகுதி இறக்கப்படுகின்றது. இவ்வாறு அங்கு கடற்புலிகளின் நிலைப்படுத்தல் உயர்ந்துகொண்டு சென்றது.

இதனாலேயே, விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படும் காலப்பகுதியாக 2003ம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதி அமைந்தது. கடற்புலிகளின் பலமே விடுதலைப் புலிகளின் பலம் என்றும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பலமான அணியாக கடற்புலிகளின் அணி செயற்பட்டது. இது சிறீலங்காக் கடற்படைக்கு மாத்திரமல்ல, தரைப்படைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்தது. தங்களுக்கான படையினர் பலத்தை பெருக்கிக்கொண்டும், ஆயுத தளவாடங்களை கொள்வனவு செய்துகொண்டுமிருந்த சிறீலங்காப் படையினருக்கு விடுதலைப் புலிகள் தங்கள் படை பலத்தை பெருக்குகின்றார்கள் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனால், தமது இராணுவ முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மறைத்துக்கொண்டு, விடுதலைப் புலிகள் சமாதான காலத்திலும் ஆயுதக் கொள்வனவிலும், புதிய போராளிகளை இணைப்பதிலும் ஈடுபடுகின்றார்கள் என்று குற்றம்சாட்டினார்கள். இதன் ஒரு கட்டமாக எழுந்த அழுத்தம் காரணமாக, சமாதானத் தூதுவர்களாக இருந்த நோர்வேயின் சமாதான அதிகாரிகள் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்படையின் படகுக் கட்டுமானங்களை நேரில் சென்று பார்வையிடுகின்றார்கள்.

கடற்புலிகள் தமது படகுகளின் வடிவங்களையும் தாக்குதல் படைகளையும் படகு கட்டுமானங்களையும் அவர்களுக்கு காட்டியதோடு கடலில் அதன் செயற்பாடுகளையும் செய்து காண்பித்தார்கள். இவை தொடர்பான தகவல்கள் சிறீலங்கா கடற்படையினரை சென்றடைகின்றன. இதேநேரம், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ படகுசேவை ஊடாகவும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் பலத்தினை சிறீலங்கா படை புலனாய்வாளர்கள் ஆராய்கின்றார்கள்.

அத்துடன், சிறிய சிறிய படகுகளில் சென்று எதிரிக்கு பாரிய இழப்பினைக் கொடுக்கலாம் என்பதையும் ஏற்கனவே கடற்புலிகள் வெளிப்படையாகக் காட்டியிருந்தார்கள். இதன் பிரகாரம், புதிதாக சிறீலங்கா கடற்படையின் தரை இறக்கும் படகணிப் படகுகள் கடற்புலிகளின் சிறிய ரகத் தாக்குதல் படகு போன்ற வடிவத்தில் உருவாக்குகின்றார்கள். அவைதான் பின்நாளில் கடற்புலிகளுடன் மோதிய அரோ வகைப் படகுகள்.

கடற்புலிகளின் படகுகளை பார்த்தே இந்தப் படகுகளை சிறீலங்காப் படையினர் வடிவமைத்துக் கொண்டார்கள். இந்த அரோ வகைப் படகுகளில் சில நவீன வசதிகளை சிறீலங்காக் கடற்படையினர் ஏற்படுத்தினார்கள். இதன் நவீன கட்டுமானத்திற்கு ஜப்பான் நாட்டின் உதவி கிடைத்திருந்தது. இவ்வாறான சுமார் நூறு வரையான அரோ படகுகளை கடற்புலிகளை எதிர்ப்பதற்காக என்றே சிறீலங்காப் படையினர் உருவாக்கியிருந்தார்கள்.

இதேநேரம், கிழக்கில் திருகோணமலையில் பல அரசியல் பணிகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள். சமாதான காலத்தைப் பயன்படுத்தி சம்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் போன்ற பிரதேசங்களில் வீதிகள், பாலங்கள் புனரமைக்கப்படுகின்றன. இந்தப் புனரமைப்பிற்கு சிறீலங்கா அரசே உதவுகின்றது. இதனுாடாக படையினர் விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளை கண்காணிக்கிறார்கள். இதனிடையே ஒட்டுக்குழுக்களின் துரோகத்தனமும், ஊடுருவல்களும் தலைதூக்குகின்றன. இவற்றையும் விடுதலைப் முறியடிக்கின்றார்கள்.

இந்த முறியடிப்பில் திருகோணமலை மாவட்டத்தின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராக மாவீரர் லெப்.கேணல் அறிவு திறம்பட செயற்படுகின்றார்.அத்துடன், அங்குள்ள மாவீரர் குடும்பங்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலை செல்லாத வறிய மாணவர்கள் இனம்காணப்பட்டு கல்வி கழகம் ஊடாக அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இனம்காணப்பட்டு உயர்தரம் படித்த மாணவர்கள் தொண்டர் ஆசிரியர் ஊடாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

மருத்துவ பிரச்சினை இனம் காணப்பட்டு வன்னியில் இருந்து தியாகதீபம் திலீபன் மருத்துவ சேவையினை வரவழைக்கப்பட்டு மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு, மக்களின் நோய்கள் தீர்க்கப்படுகின்றன. கடற்புலிகளின் ஏற்பாட்டில் சங்கங்கள் ஊடாக கடற் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு, தொழில் வாய்ப்பு ஊக்குவிக்கப்படுகின்றது. சம்பூர் வெருகல் பிரதேச மக்கள் வளமான மக்களாக மாற்றம் கண்டு வந்துகொண்டிருந்தார்கள். அத்துடன், பொருண்மிய கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது.

மக்களின் சீர்திருத்தத்தை கண்காணிக்க (தமிழீழ காவல்துறை தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியது) நீதி, நிர்வாகம் அங்கு கொண்டு செல்லப்படுகின்றது. மக்களிடையேயான பிணக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்கின்றன. பிரச்சினைகள் களையப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் இந்த சீரான நிர்வாகக் கட்டமைப்பு அயல் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் அவமானத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றது.

இதனால் சில சிங்கள கிராமத்தின் முதன்மையானவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்களுடன் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டார்கள். மூதூரைப் பொறுத்தமட்டில் மூதூர் இஸ்லாம் மக்களைக் கொண்ட நகரமாக காணப்படுகிறது. தமிழ் – முஸ்லீம் மக்களிடையேயான பிரச்சினைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தீர்க்கப்பட்டு, இரு பகுதியிருக்கும் இடையிலான உறவு அங்கு வளர்க்கப்படுகின்றது.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் கட்டுமானங்கள் அங்கும் திறம்பட செய்படுகின்றன. இந்நிலையில், வன்னியில் இருந்து தளபதி பால்ராஜ் தலைவரால் திருமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.

(தொடரும்…)

நன்றி: ஈழமுரசு

வெள்ளைக்கொடியுடன் வந்த புலித்தேவன், நடசேன் உள்ளிட்டக் குழுவினர் கோதாபய ராஜபக்~வின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்

இராணுவத்தினரிடம் சரணடையவதற்கு வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட குழுவினரை மே மாதம் 18ம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~வின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொன்றதாக இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவல்களுக்கமைய, மே 18ம் திகதி அதிகாலை 58வது படைப்பிரிவின் அந்நாள் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் ~விந்திர சில்வாவை தொலைபேசியில் தொடர்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~, போர்க் கைதிகளை வைத்துக்கொள்வது அரசாங்கத்திற்கு தேவையற்றவிடயமெனவும் வெள்ளைக் கொடியுடன் அல்லது சரணடைய வரும் எந்தவொரு தரப்பினரையும் தராதரம் பாராது சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் 18ம் திகதி பிற்பகல் பரந்தன் - முல்லைத்தீவு வழியாக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட குழுவினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்.

மேலும் சர்வதேச அமைப்பொன்றும், வெளிநாட்டு தூதரகமொன்றும் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு பாதுகாப்புச் செயலாளர், வெளிநாட்டமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சிரே~;ட ஆலோசகர் பசில் ராஜபக்~ ஆகியோருக்கு அறிவித்த பின்னரே புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றுள்ளனர்.

Sunday, October 11, 2009

-பரமேஸ்வரன் உண்ணாவிரதம் - பிரித்தானிய சஞ்சிகைக்கு எத்தகவலையும் கொடுக்கவில்லை: ஸ்கொட்லன் யாட்

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் உணவைச் சாப்பிட்டதாகவே அல்லது அதைத் தாம் படம்பிடித்ததாகவோ சஞ்சிகைகளுக்கு தாம் தெரிவிக்கவில்லை என, ஸ்கொட்லன் யாட் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் செய்தியானது மிகவும் அதிர்ச்சிகரமானது. இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என மறுத்த ஸ்கொட்லன் யாட் பொலீஸ் ஊடகப் பேச்சாளர், பத்திரிகைகள் எதைவேண்டும் என்றாலும் எழுதலாம், ஆனால் அதற்கும் எமக்கும் சம்பந்தமில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் வழங்கிய பேட்டி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Saturday, October 10, 2009

புல்மோட்டை வதைமுகாமில் சிறீலங்கா படையினர் வெறியாட்டம்! 78 ஆண்கள் கடத்தல்!!!

திருமலை வடக்குப் புல்மோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 78 ஆண்கள் சிறீலங்கா படையினரால் கடத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (09.10.2009) இரவு பவள் கவச வாகனங்கள் சகிதம் புல்மோட்டை வதைமுகாமிற்குள் புகுந்த சிறீலங்கா படையினர், அங்கிருந்த 78 ஆண்களை கடுமையாகத் தாக்கி வாகனங்களில் குண்டுக்கட்டாகக் கடத்திச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் மீண்டும் புல்மோட்டை வதைமுகாமிற்குள் நுழைந்த சிறீலங்கா படையினர், அங்கிருந்த இளம் பெண்களை பிடித்துச் செல்வதற்கு முற்பட்ட பொழுது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சிறீலங்கா படையினரின் வெறியாட்டத்தால் புல்மோட்டை வதைமுகாமில் பெரும் பதற்றம் மேலோங்கியுள்ளது.

Wednesday, October 7, 2009

கட்டுநாயக்காவில் தமிழர்களுக்கு நடக்கும் ஒரு கொடூரமான உண்மை சம்பவம் இது

அந்த இளைஞன் அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த ஒடுகலான நடைபாதையைக் கடந்து எதிரே இருந்த அறைக்குள் அவன் இழுத்துச் செல்லப்பட்டுதும் அறைக்கதவு தாழிடப்படுகிறது. அவன் எதிர்பார்க்காத கணமே அவன் முகத்தில் குத்து விழுகின்றது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி கன்னத்தில் பாய்கிறது.

அவன் கொண்டு வந்திருந்த பிரயாணப்பை கவிழ்த்துக் கொட்டப்படுகிறது. அடே ஊரு எது? ‐ இவனை இழுத்து வந்தவன் கேட்கிறான்.

மட்டக்களப்பு என்று பதில் சொல்வதற்குள் இரண்டாமவனிடமிருந்து கேள்வி வருகிறது. அது சிங்களத்தில் ஒயா கொட்டி னேத? (நீ புலி தானே?)

இவன் இல்லை சேர் என்று தொடங்கி என்னை ஒன்றும் செய்து போடாதையுங்கோ என்று கெஞ்சினான். இவனுடைய கெஞ்சல்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடைக்கவில்லை. பதிலாக காலால் உதை தான் கிடைத்தது. இவன் அறையின் மூலையில் சுருண்டு விழுந்தான். தன் பலம் கொண்ட மட்டும் அடிக்காதேயுங்கோ அடிக்காதேயுங்கோ என்று கத்தினான். அந்தக்கதறல் அந்த அறையுள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது……

அதே அறை……

இவள் கூனிக்குறுகி நிற்கிறாள். இவளை அழைத்து வந்தவன் கேட்கிறான் நீ கிளிநொச்சி தானே?

இல்லை 95ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து கிளிநொச்சியில் இருந்தனாங்கள்.

அப்ப ஐடென்ரிகாட்டிலை கிளிநொச்சி என்று கிடக்கு?

இடம்பெயர்ந்து கிளிநொச்சியிலை இருக்கேக்கை தான் இந்த ஐடென்ரி கார்ட் எடுத்தது என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் பயத்தில் நாக் குழற ஆரம்பித்து விட்டது. கேள்வி கேட்டவன் இவளை நெருங்கியிருந்தான். அவனது மூச்சுக்காற்று இவளில் பட்டு எரித்தது.

செக் பண்ண வேணும் சட்டையைக் கழற்று என்று சொல்லியபடி மார்பு பட்டனில்; கை வைத்தான் அவன்.

இவை எதுவும் ஏதாவது திரைப்படத்தில் வருகிற சித்திரவதைக்காட்சிகள் அல்ல. நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறுபவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நம்பித் தான் ஆக வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் அவை.

முதலாவது காட்சியில் வந்த இளைஞன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். ரஞ்சித் அவனது பெயர். அவனது அண்ணன் புலிகளுடன் முரண்பட்டு அங்கிருக்க முடியாமல் நாட்டை விட்டு ஐரோப்பிய நாடொன்றுக்குப் புலம் பெயர்ந்தவன். அங்கும் புலிகளுடன் உடன்படாததால் புலிகளால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டவன்.

புலம்பெயர்ந்த நாட்டிலிருக்கும் அவனது அண்ணன் ஸ்பொன்ஸர் செய்ததில் அண்ணனைப் பார்த்துவிட்டு வரப் புறப்பட்டவனுக்குத் தான் விமான நிலையத்தில் மேற்படி விசாரணையும் அடிஉதையும் கிடைத்தது.

விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை முடித்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் போய் அங்கும் அலுவல் முடித்து போடிங் பாஸையும் உடைத்துச் கொண்டு கேற்றருகில் வரும் போது தான் இருவர் அவனை வழி மறித்து செக் பண்ண வேண்டும் என்று விமான நிலையத்தின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்த ஒரு அறையில் தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றது. விசாரித்தவர்கள் இவனிடமிருந்த பணம் அனைத்தையும் பறித்துக் கொண்டனர். அம்மா அண்ணிக்காகச் செய்து கொடுத்திருந்த நகையும் போயிற்று. விசாரணை முடிகிற போது இரவாகி விட்டது. அவன் பயணிக்க வேண்டிய விமானம் போய் விட்டது. திரும்ப கொழும்பிலுள்ள அவனுடைய உறவினர் வீட்டுக்கு வந்து மறுபடி ரிக்கற் எடுத்து பிரயாணம் செய்ய வேண்டியதாயிற்று.

இரண்டாவது காட்சியில் இடம் பெற்ற பெண்ணின் பெயர் அமுதா. ஐரோப்பிய நாடொன்றில் இருந்த இளஞன் ஒருவனுக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவன் அவளை ஸ்பொன்ஸர் செய்து அழைத்திருந்தான். அவளும் உறவினர்கள் கையசைக்க விடைபெற்றவள் சுங்கம் முடித்து குடிவரவு குடியகல்வு தாண்டி கேற்றுக்குப் போகையில் தடுத்து அழைத்துச் செல்லப்பட்டாள். பிறகு நடந்த தான் மேலே சொல்லப்பட்டவை.

விமானம் புறப்படுவதற்காக இறுதி அழைப்பு விடுக்கபட்ட போது அவள் விடுவிக்கப்பட்டாள். அந்த அறையில் உடைகளைந்து அவள் பட்ட அவமானத்தை எண்ணி அவளால் பயணம் முழுவதும் அழுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.

இன்னொரு முஸ்லிம் இளைஞன். பெயர் நஜீப். மத்திய கிழக்கு நாடொன்றிற்குச் செல்வதற்காக வந்திருந்தான். தமது வீட்டை குத்தகைக்கு வைத்து பணம் எடுத்து ஏஜென்ஸிக்குக் கட்டிய கதை சொல்லிக் கத்தினான். அவன் கதறலை யார் கேட்டார்கள்? அவனுடைய ஊருக்கு அடுத்த ஊர் புலிகள் வந்து போகும் ஊராம். அந்தக்காரணம் அவர்களுக்குப போதுமாக இருந்தது அவனது பிரயாணத்தைத் தடுக்கவும் அவனைத் தடுத்து வைத்து தாக்கவும்.

ஏஜென்ஸி மூலமாகப் பணம் கொடுத்து வெளிநாடொன்றுக்குப் புறப்பட்டவன். இதேபோல போடிங் பாஸ் உடைத்த பிறகு இவர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அழைத்துச் சென்ற ஏஜென்ஸி விசயமறிந்து காரியம் பார்த்தார். பேரம் ஒன்றரை இலட்சத்தில் வந்து நின்றது. பணம் கைமாறியது. விசாரித்தவர்கள் விட்டுவிட்டதாக அறிவித்தார்கள். ஆனால் ராகுலன் வெளியே வரவில்லை. ராகுலனைக் காணவில்லை. விசாரித்ததில் மறுநாள் அவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் இருப்பது தெரிய வந்தது.

போர்டிங் பாஸ் உடைத்து விட்டு கேற்றுக்குப் போவதற்கிடையில் அந்த குறுகிய பிரதேசத்துள் எந்நேரமும் மூன்று அல்லது நான்கு குழுக்கள் நிற்கும் அவர்கள் தான் இந்த விசாரணையை மேற்கொள்வது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் புலனாய்வுப்பிரிவு, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு எனப் பல பிரிவுகள். ஒரு பிரிவு விசாரித்துவிட்டு விட்டபின்பு மற்றைய பிரிவும் உங்களை விசாரணைக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுடைய அதிகாரம் எல்லையற்றது.

ஒருமுறை கனடாவுக்குப் புறப்பட்ட பெண்மணி ஒருவர் தமது பிள்ளைகளுடன் விமானத்தி;ல் ஏறியமர்ந்த பின்னரும் கூட விமானத்திலிருந்து இறக்கப்பட்டு சோதனைக்குள்ளானார். இதனால் அவர் விமானத்தைத் தவற விட நேர்ந்தது. காரணம் அவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என்பது.

விமான நிலைய அதிகாரிகளுக்கு இவை அனைத்தும் தெரியும். குடியகல்வு குடிவரவு அதிகாரி பாஸ்போர்ட்டில் பயணம் செய்வதற்கான திகதியுடன் கூடிய முத்திரையைப் பதித்த பிறகும் இவ்வாறு பல இளைஞர்களும் யுவதிகளும் பயணத்தைத் தொடர விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இதனால் அவ்வதிகாரிகள் பதித்த முத்திரையை ரத்துச் செய்துவிட்டு பாஸ்போர்ட்டை வழங்கிய சம்பவங்களும் ஏராளமாகவுள்ளன.

லண்டனுக்கு ஸ்ரூடன்ற் விசாவில் வந்த காயத்திரி என்ற மாணவியும் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு இரவே விடுவிக்கப்பட்டார். இதனால் விமானத்தைத் தவறவிட்ட அவர் முன்னைய ரிக்கற்றிலும் பார்க்க அதிகூடுதலான விலைக்கு ரிக்கற்றைப் பெற்றுப் பயணிக்க வேண்டியிருந்தது மட்டுமல்ல குறித்த திகதியில் பல்கலைக்கழகத்திற்குச் சமூகமளிக்காததால் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர் கொள்ள வேண்டி வந்தது.

இவ்வாறு விசாரணைக்குள்ளாக்கப்படும் இளைஞர் யுவதிகள் பெரும்பாலும் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் வன்னிப்பிராந்திய அடையாள அட்டையாயின் அவர்களை நடாத்தும் விதமே தனி.

ஆக, நீங்கள் வடக்குக் கிழக்கைச் சார்ந்தவராக இருந்தால் கட்டுநாயக்கா விமானநிலையத்தூடாகப் பிரயாணம் செய்வதற்கு பாஸ்போர்ட்டும் விஸாவும் மட்டும் இருந்தால் போதாது என்கிறார் அனுபவப்பட்ட ஒரு இளைஞர்.

கட்டுநாயக்கா என்ற பெயர் கேட்டதும் எனது நினைவுக்கு வருவது சர்வதேச விமான நிலையம் அல்ல. ஒரு சித்திரவதைக கூடம் தான் என்றும் கூறுகிறார் அந்த இளைஞர்.

இவர்களின் சொந்த பாதுகாப்பிற்க்காக இவர்களது உண்மையான பெயர்கள் மட்டும் மாற்றப் பட்டுள்ளது

Monday, October 5, 2009

கொழும்பு தாக்குதல்களுடன் சதாசிவம் கனகரத்தினத்திற்கு தொடர்பு? - இலங்கையின் புது கதை

கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் தொடர்புபட்டிருப்பதாக சிறீலங்கா அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் பெயர்குறிப்பிடாத சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களின் புதல்வரான கிரி என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்றும், லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை உட்பட கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்புக்கள், தாக்குதல் சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மாடிவெல பகுதியில் அமைந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களின் வாசத்தலத்தை இவ்வாறான தாக்குதல்களுக்கான தளமாக அவரது புதல்வர் பயன்படுத்தியதாகவும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் மூத்த அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இறுதிவரை வன்னி மக்களுடன் நின்று அவர்களுக்காக குரலெழுப்பியமைக்காக கடந்த நான்கரை மாதங்களாக திட்டமிட்டவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களை சிறீலங்கா அரசு தடுப்புக் காவலில் வைத்துள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

Friday, October 2, 2009

தலைவரின் உடலை ஒத்த அந்த உடல் சூசைராஜ் என்கிற போராளியுடையது

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!" என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?" என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம் பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!

அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், ‘நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!" என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.

கடைசி வரை களத்தில் நின்ற ‘கரிகாலன்!'

மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள்.

ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.

சார்லஸ் என்ற குலக் கொழுந்து!

தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், ‘நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!' என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், ‘மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்' என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள்.

கடைசி நாளில்…

அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட… அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!' என்று நிறுத் தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். “மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.

அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்' என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்

அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்.

ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.

அந்த உடல்…

ஈழத்தையே முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.

அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல ராணுவம் காட்டுகிறது.

மாவீரர் தினத்தில்… வருவார் !!!

ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க' தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!' என்கிறார்கள் உறுதி குறையாமல்.

நன்றி தமிழ் தேசியம்

Thursday, October 1, 2009

ஹிட்லரை விடவும் மோசமானவர் ராஜபக்ஷே -அமெரிக்க டாக்டர் எலின் சான்டர்

''தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும். பொறுத்திருந்து பாருங்கள்!'' இவ்வாறு அமெரிக்காவில் இருக்கும் சான்டர் தொலைபேசி ஊடாக ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டாக்டர் எலின் சான்டர்.போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டாக்டர்; கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார்.

வட அமெரிக்காவில் ஒரு மாநாட்டில், இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து, 'எலின் சான்டர் வெள்ளைக்கார தமிழச்சி' என்று வியந்தார்! இலங்கை அகதி முகாம்களில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கக் கோரி மெக்ஸிகோ நகரில் கடந்த 22-ம் தேதி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார், எலின் சான்டர்.

இவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து ஒரு கருத்தரங்கத்தில் பேச வைக்க வைகோவும், மா.நடராஜனும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசு இவருக்கு விசா வழங்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜூனியர் விகடன் செய்தியாளர் தொடுத்த வினாக்களும், சான்டர் வழங்கிய பதில்களும்:-

''இந்திய அரசால் உங்கள் விசா கடைசி நேரத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறதே..?''

''உண்மையில் இந்தியாவுக்கு வர ஒரு மாதம் முன்பே விசா கிடைத்து விட்டது. ஆனால், நான் புறப்படும் இரு தினங்களுக்கு முன்பு, விசா கேன்சல் (cancel) செய்யப்பட்டதாக போன். இந்தியாவில் இருக்கும் ஒரு மத்திய தமிழ் மந்திரியின் வற்புறுத்தலின் பேரில்தான் விசா கேன்சல் என கூறினார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

உலகில் வேறெங்குமே நடக்காத ஒரு கொடூரம், தமிழகத்திலிருந்து வெகு அருகில் உள்ள இலங்கையில் நடந்தும், அதற்க்கான எதிர்ப்பு இந்தியாவிலிருந்து எழவில்லை. இதற்கு பதில் கேட்கத்தான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். கடைசியில் தடுக்கப்பட்டேன். ஆனாலும் நான் இந்தியா வர போராடுவேன்..!''

''அமெரிக்கரான நீங்கள் அகதி முகாம்களில் வாடும் அப்பாவி தமிழர்களுக்காக போராட முன்வந்தது ஏன்?''

''இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி முகாமில் அடைத்து வைக்கப்பட்டு, பெரும் சித்ரவதைகளுக்குப் பிறகு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்தேன். தனிமரமானேன். உலகின் எந்த மூலையில் ஒரு குறிப்பிட்ட இனம் கொடுமைப்படுத்தப்பட்டாலும், அது என்னை பாதிக்கும். அந்த வலி தெரியும். முன்பு இலங்கையில் சுனாமி நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். அப்போது தமிழீழ மக்களின் அன்பும், மன தைரியமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களின் சொந்தக்காரியாகவே என்னை நினைக்கிறேன்.

இனப்படுகொலையால் அங்கே இறந்த ஈழத் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொருவரும் மகன், அப்பா, அம்மா என உறவுகளை இழந்து தவிப்பது பேரவலம். மே மாதத்தில் மட்டும் 30,000 அப்பாவி மக்களை தமிழினம் இழந்தது. பல்லாயிரக்கணக்கானோர், முடமாகியும் அநாதையாகியும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக நான் போராடுவதுதான் மனித நேயத்துக்கான சரியான அடையாளம்.''

''இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் உங்களுக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?''

''ஆம். பருவ மழை தொடர்ந்து பெய்வதால், இப்போது அகதி முகாம்களில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அம்மை நோய் பரவுகிறது. உணவு, சுகாதாரம் எதுவுமே அங்கே சரியாக இல்லை. வாரத்துக்கு 1,500 பேர் கொல்லப்பட்டு, முகாமின் வேலிகளுக்கு வெளியே திறந்த வெளியில் வீசப்படுகிறார்கள். யாராவது கேட்டால் சித்ரவதை செய்து கொன்று அவரையும் வீசிவிடுகிறார்கள். பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதோடு, உடைகளே தராமல் பிறந்த மேனியாக அலையவிட்டிருக்கிறார்கள்.

யுனிசெஃப்பின் வவுனியா மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் சிங்கள மருத்துவர்கள் ஊசி போட்டுக் கொன்று வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. எவரையும் தங்கள் குடும்பத்தோடு வைக்காமல், வெவ்வேறு முகாம்களில் பிரித்து, கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதுவரை முகாமில் 10 ஆயிரம் மக்கள் காணாமல் போயிருக்கின்றனர். எங்கு சென்றனர், என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை! என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே இதுதான் மிகப்பெரிய, கொடிய சிறைச்சாலை!''

''செஞ்சிலுவை சங்கத்தினருக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பும் மரியாதையும் இலங்கையில் கிடைக்கிறதா?''

''பல்வேறு பத்திரிகையாளர்களும், மனித உரிமைக் குழுவினரும் இலங்கையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது உலகத்துக்கே தெரியும். யுனிசெஃப், செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு துளிகூட பாதுகாப்பு கிடையாது. பல்வேறு யுனிசெஃப் பெண் பிரதிநிதிகள்கூட பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

போரில் சிக்கி உயிரிழந்தார்கள் என்று இலங்கை அரசு சொன்ன உதாரணங்களும் நிறைய இருக்கிறது. ஹிட்லரை விடவும் மோசமானவர் ராஜபக்ஷே. அதை நிரூபிக்கும்படியான சம்பவங்கள்தான் இலங்கையில் நடந்துகொண்டே இருக்கின்றன!''

''இலங்கை நிலவரம் குறித்து, ஒபாமா அல்லது ஹிலாரி கிளிண்டனிடம் பேசினீர்களா?''

''இருவரிடமும் பேசும் வாய்ப்பு அமையவில்லை. அமெரிக்க ஸ்டேட் செக்ரெட்டரி ராபர்ட் பிளேக்கிடம் இது குறித்து விரிவாகப் பேசினேன். அவர், ஒபாமாவிடம் பேசுவதாக கூறினார். விரைவில் இந்தப் பிரச்சினை குறித்து மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக என்னிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார் ராபர்ட்.''

''நீங்கள் பேசிய ஒரு சி.டி-யில் 'தமிழீழம் மலரும்' என்று கூறியுள்ளீர்கள். அதற்கான சாத்தியக்கூறு என்ன?''

''தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. இலங்கையை முழு சிங்கள தேசமாக மாற்றலாம் என்று வெறித் தாண்டவம் ஆடும் ராஜபக்ஷேவுக்கு, உலக நாடுகளிடமிருந்து மிகப்பெரிய கண்டனங்களும் ஆபத்துகளும் இனித்தான் வரப்போகின்றன.

குறிப்பாக, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும். பொறுத்திருந்து பாருங்கள்!''

''உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''

''கண்ணி வெடிகளைக் களையெடுக்கிறோம் என்ற பேரில் சிங்களவரை தமிழர் பகுதியில் குடியேற்றம் செய்துவரும் ராஜபக்ஷேவிடம், அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனே விடுவிக்கக் கோரி உலக நாடுகளை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்த இருக்கிறோம். இனியும் விடுதலைப் புலிகள் என்று அப்பாவி மக்களை சித்ரவதை செய்வதை அனுமதிக்கக் கூடாதென உலக நாடுகள் கிளர்ந்து எழும்.

இலங்கைக்கு செய்துவரும் இராணுவ, வாணிப ரீதியான உதவிகளை முடக்க உலக நாடுகளில் விழிப்பு உணர்வு மாநாடுகள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் இலங்கை அரசு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்!'' என்றார் எலின் சான்டர்.