Friday, August 28, 2009

வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் அம்பாறையில் சுட்டுக்கொலை

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் கடந்த 25ம் திகதி இரவு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களும் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது.

இவர்கள் கடந்த 17ம் திகதி வவுனியா முகாமிலிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாக சக உறவினர்களிடம் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர். இதன் பின்னர், அந்த உறவினர்கள் தமது இரண்டு உறவினர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து முகாம்களில் தொண்டுப் பணியில் ஈடுபட்டுள்ள செடெக் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து அந்த அமைப்பினர் தமது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லையென அறியப்படுகிறது.

செடெக் நிறுவனத்தில் உள்ள இலங்கைத் தலைவரான டேமியன் பெரேரா என்ற கத்தோலிக்க மதகுரு மாலை வேளைகளில் ஜனாதிபதியின் நண்பர் சமுகத்துடன் விருந்துகளில் கலந்துகொள்பவர் எனத் தெரியவருகிறது. எனவேதான், இதுகுறித்து எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ்விருவரும் விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளில், மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பயிற்சி கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஜாமடீன் கொலையுடன் இவர்கள் நேரடியாக தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறை அத்தியட்சகர் கடந்த ஏப்ரல் 5ம் திகதி கல்முனை மருதமுனைப் பகுதியிலுள்ள பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

கந்தபோடி மற்றும் சீலன் ஆகியோரே இவ்வாறு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கந்தபோடியின் மனைவி ஒரு சிங்களப் பெண். இவர் கைதுசெய்யப்பட்ட விசாரணை செய்தபோது வெளியான தகவல்களுக்கமையவே கந்தபோடி வவுனியா முகாமில் மறைந்திருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment