உள்நாட்டில் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அழைப்பை விடுக்கின்ற அரசாங்கம் அதே தமிழ் மக்களின் இரத்த உறவுகளான புலம் பெயர் தமிழர்களுடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டியது அவசியமாகும். கடந்த மே மாத நடுப்பகுதியில் போர் முடிவடைந்ததையடுத்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு பகுதிகளை புனர்நிர்மாணஞ் செய்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு உதவுமாறு புலம் பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து அந்த வேண்டுகோளுக்கு அனுகூலமான பிரதிபலிப்பு பரந்தளவில் வெளிக்காட்டப்படக் கூடியதாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை நோக்கிய செயன் முறைகளில் உருப்படியான நகர்வுகள் இல்லை என்பது எமது அபிப்பிராயம். அதேவேளை புலம்பெயர் தமிழர்களை ஒட்டு மொத்தத்தில் விரோதிகளாக நோக்கும் அணுகுமுறையை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் கணிசமான பிரிவினர் கடைப்பிடிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. போர் முடிவடைந்து விட்டாலும் அந்தப் போருக்கான அடிப்படைக் காரணியான இனநெருக்கடியின் விளைவாக சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையின் நிகழ்வுப் போக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அகவுணர்வுகளுக்கு அப்பால் சிந்தித்து ஏற்றுக்கொள்வதே உண்மையில் ஆரோக்கியமானதாக இருக்கும்.
இத்தகையதொரு பின்புலத்திலே தான் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் றொபேர்ட் பிளேக் இவ்வாரம் அமெரிக்காவில் உள்ள புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது வெளியிட்ட கருத்துகளை நோக்க வேண்டியிருக்கிறது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜேம்ஸ் மூர் சகிதம் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக ஆராய்ந்த பிளேக் அரசியல் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார். நிலையான சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்கு அதிகாரப்பரவலாக்கலை செய்வதற்கும் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கும் புதியதொரு பொறி முறையை இலங்கை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள தமிழர்களுடன் மாத்திரமல்ல புலம் பெயர் தமிழ்ச் சமூகத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி நல்லிணக்கத்துக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியிருப்பதாகவும் பிளேக் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து வரக்கூடிய பிரதிபலிப்பை அறியக் காத்திருப்போம்.
அதேவேளை, கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் தயா பெரேரா கனடாவில் வாழும் தமிழர்கள் தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துகள் எமது கவனத்தை வெகுவாக தூண்டியிருக்கின்றன. "இலங்கையில் இருந்து தமிழ் பேசும் மக்களை அகதிகளாக வருவதற்கு அனுமதித்ததற்காக கனடிய அரசாங்கம் ஒரு நாள் வருத்தப் படும். மனித உரிமைகளை பேணிக்காத்து மேம்படுத்துவதில் கனடா பெருமைப்படுகிறது. ஆனால், இலங்கையில் இருந்து கனடாவுக்கு வந்திருக்கும் தமிழர்கள் இறுதியில் எதிர்காலத்தேர்தல்களில் முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளாக மாறுவார்கள் என்பதை கனடிய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்' என்று பிரபல சட்ட நிபுணரான தயாபெரேரா கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றின் இணையத்தளத்துக்கு தெரிவித்திருக்கிறார். அகதிகளாக கனடாவுக்கு தமிழர்கள் பெருமளவில் வருவதற்கு அனுமதிப்பது கனடியர்கள் நாளடைவில் பெரும் அரசியல் பிரச்சினைகளை எதிர் நோக்குவதற்கு வழிவகுக்கும் என்பதே இலங்கை உயர்ஸ்தானிகரின் செய்தியாகும். பல்இன, பல்கலாசார சமுதாயமொன்றில் மற்றையவர்களின் அபிலாசைகளையும் உணர்வுகளையும் மதித்து பரஸ்பர விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் சமாதான சகவாழ்வை முன்னெடுப்பதில் இலங்கையில் உள்ள ஒருபிரிவினருக்கு இருக்கின்ற சிக்கலே இதுவரையான நெருக்கடிகளுக்கெல்லாம் காரணம். இத்தகைய ஆரோக்கியமற்ற சமூகச் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு கனடாவில் தமிழர்கள் அனுமதிக்கப்படுவதைப் பொறுக்க முடியவில்லை. அதன் தவிர்க்க முடியாத வெளிப்பாடே தயாபெரேராவின் கருத்து. கனடாவின் வரலாற்றை தயா பெரேரா அறியாதவர் அல்லவென்று நம்புகின்றோம். ஆனாலும், அவருக்கு ஒரு சம்பவத்தை மாத்திரம் நினைவுபடுத்த இச் சந்தர்ப்பத்தில் விரும்புகின்றோம்.
1980 களின் நடுப்பகுதியில் மேற்குஜேர்மனியிலிருந்து மூன்று படகுகளில் இலங்கைத் தமிழ் அகதிகள் (பெண்களும் கைக்குழந்தைகளும் உட்பட) நூறுக்கும் அதிகமானவர்கள் கனடாவின் நியூபவுண்ட்லாந்து கரையோரமாக வந்து கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது கனடிய கரையோரக் கடல்படையினரால் காப்பாற்றப்பட்டனர். அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைத்த கனடிய அதிகாரிகள் அவர்களுக்கு தஞ்சம் வழங்குவதா இல்லையா என்பது குறித்துப் பரிசீலனை செய்துகொண்டிருந்தபோது இலங்கையில் இருந்து பல்வேறு இனவாத அமைப்புகள் (சில பௌத்தபிக்குமார் உட்பட) அந்த அகதிகளுக்கு கனடா தஞ்சமளிக்கக்கூடாதென்று கிஞ்சித்தேனும் இரக்கமின்றி கோரிக்கைவிடுத்தன. கனடிய பாராளுமன்றத்திலும் அகதிகள் பிரச்சினை கிளப்பப்பட்டது.அதற்குப் பதிலளித்த அப்போதைய பிரதமர் பிறையன் மல்றோனி அளித்த பதில் என்ன தெரியுமா? "கனடா குடியேற்ற வாசிகளின் நாடுதான். படகில் வந்த மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டியது எமது கடமை'.
நன்றி தினக்குரல்
No comments:
Post a Comment