ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துடன் கைது செய்யப்பட்ட ஊடகப் பணியாளர் யசிகரன், அவரது மனைவி வளர்மதி ஆகியோர் மீதான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. யசிகரன் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாக ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது பற்றிய ஒரு குழப்பம் நிலவியது.
பயங்கரவாதத் தடுப்புக் காவற்துறையினர் சிவில் உடையில் தன்னைத் தாக்கியதால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே தான் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட்டதாக அவர் தெரிவித்தார். காவற்துறையினர் சிலரை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். ஒரு வாரத்திற்கு மேலாக யசிகரன் தாக்குதலுக்குள்ளானார்.
சிங்கள மொழியில் எழுதப்பட்ட அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒப்பமிடுவதற்கு முன்னதாக யசிகரனுக்கு வாசித்துக் காட்டப்படவில்லை. இதில் கையொப்பமிடுவதால் ஏற்படக்கூடிய சட்டப்பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறப்படவில்லை. அத்துடன், யசிகரனுக்கு தமிழில் மட்டுமே பேசவும் புரிந்து கொள்ளவும் முடியும் என யசிகரனின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கு விசாரணை செய்த அரச தரப்பு சட்டவாதி, அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கின் போது ஏன் அவர் அந்த பயங்கரவாதத் தடுப்புக்; காவற்துறையினரின் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்று கேள்வியெழுப்பினார்.
தான் அந்நேரத்தில் அச்சமடைந்திருந்ததாகவும், அதேநேரத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிரதிவாதியாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக் காவற்துறைப் பொறுப்பதிகாரியின் பெயரைக் குறித்துக் காட்டியதாகவும் யசிகரன் இதன்போது தெரிவித்தார்.
சிங்கள மொழி தெரியாத அவர் அவருடைய சொந்த ஊரான மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வரும் போது அச்சம் கொள்ளவில்லையா என்ற இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த யசிகரன் தனக்கு கொழும்பில் பல நண்பர்கள் இருந்ததால் தான் இது குறித்து அதிகம் அச்சம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
முன்னைய விசாரணையின் போது தான் சித்தரவதைக்குள்ளாக்கப்படுவது குறித்து நீதிபதியிடம் தெரிவித்த பின்னரும் தான் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் விசாரணையின் போது கூறினார்.
வழக்கு விசாரணையின் போது யசிகரனின் மேற்சட்டையின் மேல் பொத்தான் திறந்திருந்தது. அவர் சித்திரவதையின் போது தனக்கு ஏற்பட்ட அடையாளத்தைக் காட்ட முற்பட்டார். எனினும் நீதிபதி அவ்வாறான அடையாளத்தைத் தன்னால் காணமுடியவில்லை என்று தெரிவித்தார். பின்னர் இது குறித்து குறிப்பிட்ட நீதிபதி யசிகரனின் இந்த நடவடிக்கை நீதிமன்றை அவமதிக்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
இதன்போது யசிகரன் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் யசிகரன் நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் அவ்வாறு செய்யவில்லை என்றும், சித்திரவதை தொடர்பான அடையாளத்தை காட்டும் முயற்சியின்போது அது இயல்பாக நிகழ்ந்தது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு தனது கட்சிக்காரரால் நீதிமன்றிற்கு ஏதாவது அவமதிப்பு நிகழ்ந்திருப்பின் அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வழக்கு சிங்கள மொழியிலேயே நடைபெற்றது. அவ்வப்போது ஆங்கிலமும் பயன்படுத்தப்பட்டது.
யசிகரனிடம் கேள்விகள் தொடுக்கப்பட்ட போது அவை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. எனினும் நேரடியாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக நீதிமன்றத்தை அவர் அவமதித்தாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட அவருக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படவில்லை. இதேவேளை யசிகரனுடன் ஆஜர்படுத்தப்பட்டிருந்த அவருடைய துணைவியான வளர்மதிக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் மொழி பெயர்ப்பு வழங்கப்படவில்லை
வழக்கு விசாரணை செப்ரம்பர் 22ம் திகதி ஒன்றரை மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment