இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் உடனடியாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத போதிலும், வவுனியா முகாம்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் சீற்றத்தை ஏற்படுத்தியதையடுத்தே இவ்வாறான அதிரடி நடவடிக்கையில் சிறிலங்கா அரசு இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) ஒரு மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டர் என்பரே இரு வார காலத்துக்குள் சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் வரையில் சிறிலங்காவில் பணிபுரிவதற்கு இவருக்கு 'விசா' உள்ள போதிலும், இந்தத் திடீர் உத்தரவை சிறிலங்கா அரசு பிறப்பித்திருக்கின்றது.
இராஜதந்திர தகுதியுடன் கூடிய ஐ.நா. கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அரசினால் கேட்டுக்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறே இவருக்கு முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் குறிப்பிட்ட ஐ.நா. அதிகாரி கேட்டுக்கொண்டதாலேயே இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெளியேற்றத்துக்கான காரணம் எதுவும் சிறிலங்கா அரசினால் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், குறிப்பாக அங்குள்ள சிறுவர்களின் நிலை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அடிக்கடி கருத்துக்களைத் தெரிவிப்பதாலேயே இந்த முடிவை சிறிலங்கா அரசு எடுத்திருக்க வேண்டும் என தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறிலங்காவுக்கான யுனிசெஃப்பின் அலுவலகத்தில் தகவல் தொடர்பு பிரதான அதிகாரியாக ஜேம்ஸ் எல்டர் பணிபுரிந்து வருகின்றார். இவர் அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேம்ஸ் எல்டரின் விசா காலாவதியாகிவிட்டது எனவும், அவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகாரச் செயலாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் கலாநிதி பாலித கோகன தெரிவித்தார்.
"இது நாடு கடத்தல் அல்ல. இது குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையே இது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும் ஜேம்ஸ் எல்டரின் விசாவை இரத்துச் செய்யுமாறு குடிவரவுத் திணைக்களப் பணிப்பாளர் பீ.பி.அபயக்கோனுக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகின்றது.
சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக நியூயோக்கில் உள்ள யுனிசெஃப் தலைமையக அதிகாரி ஒருவர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் நியூயோர்க்கில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment