கடந்த மே மாதம் 19ம் திகதி நந்திக்கடல் களப்பிற்கு அருகில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அந்த அமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சினால் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த விசேட அறிக்கையை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்கவிடம் நேற்று கையளித்தார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இதனைச் சமர்ப்பித்துள்ளார்.
லக்ஸ்மன் கதிர்காமர் கொலைச் சம்பவத்தின் பிரதான பிரதிவாதிகளாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதுகாப்பு அமைச்சினால் விசேட அறிக்கையொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த மே மாதம் 19ம் திகதி நந்திக்கடல் களப்பிற்கு அருகில் கொல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு மீட்கப்பட்ட சடலம் பிரபாகரனுடையது என அடையாளம் காணப்பட்டதாகவும், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனியின் உடலில் இருந்து பெறப்பட்ட மரபணுவில் இருந்து அதனை உறுதிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொட்டு அம்மான் அல்லது சிவசங்கர் என்ற பிரதிவாதியும், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலரும் நந்திக்கடல் களப்பு பிரதேசத்தில் மே மாதம் 18ம் திகதி அதிகாலை 4 மணியளிவல் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொட்டு அம்மான் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், மீட்கப்பட்ட சடலம் பொட்டு அம்மானின் சடலமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை சம்பந்தமாக எதிர்ப்புகள் இருக்கின்றதா என நீதிபதி பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம் கேட்டுள்ளார்.
சாதாரணமாக இவ்வாறான வழக்கொன்றின் போது, மரணச் சான்றிதழ் குறைந்தபட்ச ஆவணமாக சமர்ப்பிக்கப்படும் என்ற போதிலும் பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமாயின் அதற்குத் தாம் எதிர்ப்பை வெளியிடப் போவதில்லையென பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கதிர்காமர் கொலை தொடர்பான வழக்கை எதிர்வரும் 12ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது என நீதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன், பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்களை பிரதிவாதிகள் பட்டியலிலிருந்து நீக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment