Monday, March 2, 2009

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் பேரணி

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
இலங்கையில் சிங்கள அரசு நடத்தி வரும் போரால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை கண்டித்து, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த பேரணி நேற்று பெங்களூர் டவுன் ஹாலில் தொடங்கியது. இதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். மதியம் 2 மணிக்கு பேரணி தொடங்கியது.
இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் எல்.பழனி, கர்நாடக தமிழ் மக்கள் இயக்க நிர்வாகி மாரி, தமிழ் பிரமுகர்கள் பழனிகாந்த், செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிரபாகரன் மற்றும் புலிக்கொடி ஏந்தியபடி ஊர்வலம்!
திறந்தவெளி லாரியில் இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட தமிழ் பிரமுகர்கள் சென்றனர். அதைத்தொடர்ந்து சாரை சாரையாக பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் கையில் தமிழ் இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் எழுதப்பட்ட பேனர்களை வைத்து இருந்தனர். இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி குழந்தைகளின் படங்களையும் பிடித்தப்படி சென்றனர்.
ஏராளமான தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தைக் கையில் ஏந்தியப்படி வந்தனர். சிலர் தமிழீழப் படம் மற்றும் புலிகளின் சிவப்புக் கொடியை ஏந்தி உணர்ச்சி மயமான கோஷங்களுடன் சென்றனர்.
கொல்லாதே கொல்லாதே தமிழர்களை கொல்லாதே..,
இந்திய அரசே, இந்திய அரசே சிங்கள ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்காதே..,
வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும்…,
மோதாதே மோதாதே தமிழனிடம் மோதாதே..,
ஈழ ரத்தம் எங்கள் ரத்தம்..,
புலிகள் மீதான தடையை நீக்கு,
இந்திய அரசே இந்திய அரசே போரை நிறுத்த நடவடிக்கை எடு..,
தமிழர் ரத்தம் குடிக்கும் ராஜபக்சேதான் பயங்கரவாதி…

என கோஷங்களை உரத்த குரலில் உணர்வுப் பொங்க எழுப்பினார்கள்.

No comments:

Post a Comment