Tuesday, March 3, 2009

இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு

பாகிஸ்தானில் லாகூர் கடாபி மைதானத்தில் இடம்பெறவிருந்த பாகிஸ்தானுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வதற்காக விளையாட்டரங்கிற்குச் சென்றபோது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் சென்ற வாகனம் மீதும், அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்ற பாகிஸ்தான் பொலிஸ் வாகனம் மீதும் இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இலங்கை கிரிக்கட் அணியின் 6 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த வீரர்கள் திலான் சமரவீர, தாரங்க பரணவித்தான, அஜந்த மெண்டிஸ், குமார் சங்ககார ,மஹேல ஜெயவர்தன மற்றும் துணை பயிற்றுவிப்பாளர் ஆகியோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹேல ஜெயவர்தன தனது காலில் சிறு காயம் ஏற்பட்டு உள்ளதாக அவரது மனைவிடம் தொலைபேசியில் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியுடனான இரண்டு போட்டிகளிலும் இரட்டைச் சதங்களைப் பெற்றுக்கொண்ட திலான் சமரவீர மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர் இருவருக்கும் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஏனைய காயமடைந்த நான்கு வீரர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் நடைபெறவிருந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடாபி மைதானத்திற்கு பேரூந்து மூலம் சென்ற கிரிக்கட் வீரர்கள் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் காரணமாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திக்கிடைத்த தகவல்களின்படி பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியின் காயமடைந்த வீரர்கள் உட்பட அனைவரையும் இன்று மாலை கொழும்புக்கு விஷேட விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment