Wednesday, March 4, 2009

நியாயமான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட்டால், புலிகளை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும்-அருளர்:

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என பிரபல சர்வதேச ஹிப்பொப் பாடகி எம்.ஐ.ஏ(மாதங்கி அருள்பிரகாசம்) வின் தந்தை அருளர் எனப்படும் அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். 30 ஆண்டு காலமாக தொடரும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சுயாதீன மத்தியஸ்தராக கடமையாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தொடரும் யுத்த நிலைமைகளின் காரணமாகவே தாம் புலம்பெயர்ந்து வாழ நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் தற்போது இராணுவப் பலம் அதிகளவில் காணப்பட்ட போதிலும், தற்போதைய யுத்த அணுகுமுறையின் மூலம் ஓருபோதும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி அரசாங்கம் முக்கிய தமிழ் தரப்புக்களை ஜனநாயக அரசியலில் இணைத்துக் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முனையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாறாக, தம்முடன் நட்புறவு பேணிவரும் சில தமிழ் அரசியல் கட்சிகளை மட்டும் சமாதான முயற்சிகளில் இணைத்துக் கொண்டுள்ளதாகவும், இதனை ஓர் வெற்றிகரமான முயற்சியாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழம் தமிழர்களுக்கு உரித்தானது, சிங்கள நாடு சிங்களவர்களுக்கு உரித்தானது இலங்கை முழு இலங்கையர்களுக்கும் உரித்தானது என்ற கொள்கையின் அடிப்படையில் தீர்வுத் திட்ட முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அருளர் அருட்பிரகாசம் தெரிவித்துள்ளார். இந்திய உதவியுடன் வன்னிப் பெருநிலப் பரப்பில் புலிகள் முற்றாக விரட்டியடிக்கப்பட்ட போதிலும் கெரில்லா போராட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் சில ஆண்டுகளுக்கு போராட்டத்தை தொடரக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழர் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையிலான நியாயமான தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் பிரபாகரனை இணக்கம் காண வைக்க தம்மால் முடியும் என அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். நியாயமான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட்டால், தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்ய எம்.ஐ.ஏ விருப்பம் தெரிவித்துள்ளார்.அருளர் எனப்படும் அருள்பிரகாசம் 1980 களில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபாட்டைக் கொண்டிருந்தவர். ஈரோஸ் எனப்படும் ஈழரவ் ஜனநாயக முன்னணியில் இணைந்து செயற்பட்டவர். இவர் லங்காராணி அருளர் எனவும் அழைக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment