தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு உலகின் பல பகுதிகளில் தியான பீடம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. தியான பீடத்தில் சீடராக இருந்த லெனின் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் நித்யானந்தா மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்தது கர்நாடகாவில் என்பதால் வழக்குகளை அந்த மாநில போலீசுக்கு மாற்றினர்.
இந்த வழக்கை கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் சேலம் வந்து லெனினின் சொந்த ஊரில் விசாரணை நடத்திவிட்டு சென்றனர். இதற்கிடையே, கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வீடியோ காட்சிகள் வெளிவந்த பிறகு நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் உள்ளது. அவ்வப்போது வீடியோ மூலம் சில விளக்கங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தியான பீடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறக்கட்டளைகளின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக நித்யானந்தா நேற்று திடீரென அறிவித்தார். இது தொடர்பாக தனது உரையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:
தியான பீடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் என்ற முறையில் என்னைப் பற்றி கடந்த 3 வாரங்களாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்து தர்மத்தின் மதிப்புமிக்க ஆச்சாரியார்களில் சிலரை ஹரித்துவாரில் சந்தித்து பேசினேன். நடந்த உண்மைகளை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அவர்களது ஆன்மீக மற்றும் தார்மீக வழிகாட்டுதலை ஏற்று, தியான பீடத்தின் எதிர்காலம் குறித்த அவர்களின் கருத்துகளின்படி முழுமையாக நடப்பேன்.
தனிமையில் எனது ஆன்மீக வாழ்வை வாழ முடிவு செய்துள்ளேன். இந்த முடிவை ஆச்சாரியார்களும் ஏற்றுக் கொண்டனர். தேவைப்படும் சில மாற்றங்களோடு தியான பீடம் தொடர்ந்து செயல்படும். அதற்காக பீடத்தின் தலைமை பொறுப்பில் இருந்தும், அதைச் சார்ந்த மற்ற அமைப்புகளில் வகித்த பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.
தியான பீடத்தைச் சேர்ந்த, சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட சாதகர்களைக் கொண்ட ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்படும். அந்தக் குழு, இனி தியான பீடத்தை நடத்தும். புதிதாக நிர்வகிக்கப்படும் அமைப்புக்கு வழிகாட்டும்படி ஆச்சாரியர்களை கேட்டுக்கொண்டேன். அவர்களது கருத்துகளை பெற்று அதன்படி செயல்படுமாறு புதிய நிர்வாகிகளையும் கேட்டுக் கொண்டேன். கடந்த 10 ஆண்டுகளாகவும், அதற்கு முன்னதாகவும் எனக்கு பரிச்சயமான, என்னுடைய வழிகாட்டுதலை பெற்ற அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீட்சை பெற்ற ஆன்மீக சாதகங்களில் தொடர்ந்து ஈடுபடுமாறு அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
தேவைப்படுமானால், மீண்டும் திரும்பி வந்து எல்லாவற்றையும் திறந்த இதயத்தோடும், தூய ஆத்மாவோடும் இணக்கமான சூழ்நிலையில் விளக்குவேன். இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளார். இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு, கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் ஆங்கில மற்றும் கன்னட மொழிபெயர்ப்பை சிஐடி சூப்பிரண்டு யோகப்பா சமர்ப்பித்தார். கோர்ட்டில் அவர் கூறுகையில், ‘‘நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 2 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. ஆவணங்களை மொழி பெயர்த்ததை தவிர, இந்த வழக்கில் வேறு முன்னேற்றம் எதுவும் இல்லை’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி அரளி நாகராஜ், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6&ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு தொடர்பாக நித்யானந்தா தனது ஆட்சேபணையை தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார்.
தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment