Saturday, March 20, 2010

தர மறுத்தால் மகிந்தவுக்கு தலையிடி வரும் - சம்பந்தன்

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக்கொண்டு தீர்வினை வழங்க மறுத்தால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தும் பல இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கியும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளை தடுப்புகளில் அடைத்தும் கொரூரம் புரிந்தது தற்போதைய ஆளும் கட்சி அரசு. தமிழ் மக்கள் தொடர்பிலான எந்தவித ஈவிரக்கமும் அற்றுச் செயற்பட்ட ஆளும் கட்சிக்கு தமிழ் பேசும் மக்கள் எவரும் வாக்களிக்கக் கூடாது அவ்வாறு வாக்களித்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்றும் தெரிவித்த இரா சம்பந்தன் மானமுள்ள தமிழ் மக்கள் எவரும் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்க மாட்டார்கள். ஆளும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதானது மீண்டுமொரு பாரிய அழிவினை நோக்கியே தமிழர்களைக் கொண்டு செல்லும் செயற்பாடாகவே அமையும் என்று தெரிவித்த இரா சம்பந்தனிடம்,

மகிந்த தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட எந்தவிடயத்தினையும் தமிழ் கட்சிகள் கோரக்கூடாது என்று தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கேட்கப்பட்டபோது,

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து திடமான வெற்றியைக் கொடுத்தால் அதுதான் தமிழ் மக்களுக்கான ஜனநாயமான வெற்றியாக அமையும். அந்த முடிவினை அரச தலைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

மக்களினுடைய முடிவினை மக்கள் ஜனநாயக ரீதியில் வழங்குகின்றபோது அந்த முடிவிற்கு ஏற்ப ஜனநாயக அடிப்படையில் ஒரு தீர்வு அமையவேண்டும். பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தான் இலங்கையில் ஆட்சி நடைபெறுகின்றது. சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த நிலையில் இருந்து அரச தலைவர் விலகுவாராக இருந்தால் இதனது விளைவுகள் வேறுவிதமாக அமையலாம் என்றும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் மகிந்தராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ்பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் இன்றைக்கு இருக்கக்கூடிய சர்வதேச சூழ்நிலை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும். சர்வதேச நாடுகள் எம்மை நிராகரிக்க முடியாது. சிறீலங்கா அரசாங்கத்திற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அரச தலைவர் சொல்லியிருக்கலாம். ஆனால் அரச தலைவர் சொல்லுகின்ற கருத்துக்கள் முடிவானவை அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் அதிகபடியான வாக்குகளை பெற்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் போது தமிழ் மக்கள் ஒரு ஆணையோடு எம்மை அனுப்பினார்கள் என்கின்ற பாரிய செய்தி முன்வைக்கப்படும்.

அவர்களுக்கு என்ன தேவை என்பதை முன்னிலைப்படுத்தியே மக்கள் எம்மை பாராளுமன்றம் அனுப்புவார்கள். ஆகவே அந்த வகையில் அனுப்பப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் முன் அழுத்தமான கோரிக்கைகளை முன்வைக்கும்.

அந்த வேளை எமக்கான தீர்விற்கான நடவடிக்கைகளை சர்வதேசம் மேற்கொள்ளும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், மாவை. சேனாதிராசா, சுரேஸ்பிறேமச்சந்திரன், சி.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட வேட்பாளர்கள் பங்குகொண்டனர்.

No comments:

Post a Comment