ஆழிப் பேரலை ஊழித் தாண்டவமாடி எமதுறவுகளைக் காவு கொண்டு ஜந்தாண்டுகள் கடந்த நிலையிலும் பேரழிவைக் கண்ட எமது மக்களிற்கு உலக சமூகம் அனுப்பிய முழுமையான உதவிகள் சென்றடையாமலே போனதை வெளி உலகம் நன்கறிந்தும் அது பற்றி அக்கறையாக நியாயக் குரல் எழுப்பவில்லை.
நெடுங்காலப் போரின் வலியைச் சுமந்த மக்களிற்கு 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிறு ஆறுதல் கிடைத்திருந்த வேளையில்தான் இயற்கைப் பேரழிவும் ஏற்பட்டது. 26.12.2004 அன்று தமிழர் தாயகத்தின் மாதகல் தொடக்கம் அம்பாறை உகந்தை வரையிலும் குறுகிய நேர இடைவெளிக்குள் பேரழிவு ஏற்பட்டது. போரினால் தொடரழிவுகளைச் சந்தித்தவர்கள் இயற்கையின் அழிவுகளாலும் உடைந்து போனார்கள். ஏன் இப்படிக் கொடுமை நிகழ்ந்ததென மனம் பேதலித்து அங்கலாய்த்தவர்களின் மீள் வாழ்விற்கு உலக சமூகம் வழங்கிய உதவிகளையும் சிறி லங்காப் பேரினவாத அரசாங்கம் தடுத்தது. இயற்கை அழிவுகளையும் தனது தமிழின அழிவிற்கான ஒரு பகுதி வேலையாகவே சிறி லங்கா அரசாங்கம் நோக்கியது. அத்தகைய, நோக்கத்துடன் தான் துயர் மிகுந்த அந்த வேளையிலும் கூட தலைவர் பிரபாகரன் ஆழிப் பேரலையில் சிக்குண்டார் என்றெல்லாம் பொய்ப் பரப்புரைகளைச் செய்தது. இப்படியான கொடுமையான சிந்தனை காலியில் நடந்த ஒரு சம்பவத்துடன் ஒப்பிடக் கூடியது தான்.
சிறி லங்காவில் காலி மாவட்டமும் ஆழிப் பேரலையால் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருந்தது. இந்த இயற்கை அநர்த்தம் கோர தாண்டவமாடிக் கொண்டிருந்த வேளை அதற்குள் சிக்குண்ட இளம்பெண் ஒருவர் உயிரிற்காகப் போராடிக் கொண்டிருந்தார். அந்த இளம் பெண்ணைக் காப்பாற்றுவது போல பாசாங்கு செய்த ஒருவர் அவரைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார். (இது நடந்தது சிங்கள தேசத்தில். சிங்கள அளம் பெண்ணிற்கு, சிங்கள நபரால்) அது போன்ற கொடுமையான சிந்தனையோடு தான் தமிழரைச் சிங்களப் பேரினவாதிகள் நோக்கினார்கள்.
தலைவர் பிரபாகரனோ பேரழிவை அடுத்து அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டார். 'ஆற்ற முடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களிற்கு எமது அன்பையும் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோன். அது போலவே தமிழ்பேசும் தாயக மண்ணிலும் தென்னிலங்கை கடலோரப் பகுதிகளிலும் தமது உற்றார் உறவினரைப் பலிகொடுத்து ஆறாத துயரில் ஆழ்ந்திருக்கும் இஸ்லாமிய, சிங்கள சகோதரர்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபம் உரித்தாகுக. தென்னாசிய நாடுகளிலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் உயிரிழப்புக்களைச் சந்தித்து துயருறும் மக்களின் சோகவுணர்விலும் பங்கு கொண்டு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றேன்."
இது தலைவர் பிரபாகரனின் அனுதாபச் செய்தி. அத்துடன் மட்டும் நின்றுவிடாமல் தாயகத்தில் என்னென்ன உதவிகள் மக்களிற்குச் செய்ய வேண்டுமோ அவற்றை தாராளமாகவே செய்யுமாறு போராளிகளிற்கும் தளபதிகளிற்கும் தலைவர் பிரபாகரன் பணித்தார்.
தளபதிகளும் போராளிகளும் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்குத் தாராளமாகவே உதவினார்கள். சிறி லங்கா அரசாங்கமோ ~மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்க, மாடேறி மிதித்தவன் மேல் மரத்தைத் தறித்து வீழ்த்துவதற்கு| ஒப்பான காழ்ப்புணர்வு கொண்ட வேலைகளையே செய்தது. இதில் அன்றைய சிறி லங்காவின் ஜனாதிபதியான சந்திரிகா இடையறாது அக்கறையாச் செயற்பட்டார். வெளிநாடுகளின் தலைவர்களை ஏன் ஐ.நா.வின் அன்றைய பொதுச் செயலாளர் கோபி அனானைக் கூட விடுதலைப் புலிகளின் ஆழுகைக்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் செல்லவிடாது தடுத்தார்.
உலகின் கண்துடைப்பிற்காக சிறி லங்கா சில உதவிகளை அனுமதித்தது. ஆனால், முழுமையான மீள்கட்டுமானத்திற்கான வேலைகளைத் தடுத்தே வந்தது.
ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களை மனித நேயத்தைப் புதைத்துவிட்டு நோக்கிய சிறி லங்காவைப் பற்றி எடுத்துக் கூறினால் அதுவே ஒரு பெரும் தொடராகி விடும்.
போரினால் நெடுங்காலத் துயர் சுமந்தவர்களிற்கு ஆழிப் பேரலை பேரழிவை ஏற்படுத்தியது. ஆழிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர் மீண்டும் ஆற்றப்பட முன்னரே சிறி லங்கா போரைத் தொடங்கியது. இப்பொழுது முழுமையாக தமிழினத்தைத் துவம்சம் செய்வதற்கானதாக சிறி லங்கா அரசால் மூர்க்கத்தனமாக இன ஒதுக்கல் முன்னெடுக்கப் படுகின்றது. தமிழரை அவர்களின் தாயகத்தில் முழுமையாக அழித்து விடுவதற்கான இறுதி நடவடிக்கையாக அது தமிழர்களை வதைத்து வருகின்றது. எப்படி ஆழிப் பேரலை ஏற்பட்டபோது எமக்கு நாமே என்று பணி செய்தோமோ அதே போன்றுதான் இன்றைய காலகட்டத்திலும் நாமே அவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை வருவதற்கு முன்னர் தமிழர் தாயக மண்ணில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்பட்டன. மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். அதனை நினைவூட்டுவது போல இன்று தாயக மக்கள் மழை வெள்ளத்தால் அவதியுறுகின்றனர்.
கிளிநொச்சியில் இருந்து மடுவிற்கு, மடுவில் இருந்து மல்லாவிக்கு, மல்லாவியில் இருந்து மாங்குளத்திற்கு, மாங்குளத்தில் இருந்து முள்ளியவளைக்கு, முள்ளியவலையில் இருந்து உடையார் கட்டிற்கு என மாறி மாறி இடம் பெயர்ந்து ஈற்றில் முள்ளிவாய்க்கால் கொடும் வதையோடு துன்பக்கடலில் துயருடன் வாழும் மக்களிற்கு வெள்ளமும் பாதிப்பினையே கொடுக்கின்றது. இக் கொடுமையில் பரிதவிக்கும் எமது உறவுகளிற்கு நாம்தான் துணையாக இருக்க முடியும்.
இத்தனையும் நடக்கின்ற போதும் ஈவீரக்கமின்றி அந்தமக்களை கொடுமைப்படுத்தி வருகிறது சிறி லங்கா அரசாங்கம். ஆயினும் புலத்து மக்கள் இன்னும் என்ன செய்து கொண்டுள்ளனர் என்ற கேள்வி யாரிக்கு வரவில்லை என்றாலும் அவலத்தில் வாழும் மக்களிற்கு வருவது தவிர்க்க முடியாததே. ஆனால், இப்போது வன்னியில் வாழும் மக்களை சிந்தியுங்கள் எவ்வளவு துயர்? ஆழிப் பேரலையை இந்த மாதம் 25/26 மீண்டும் நினைவு படுத்தும் நாள் நெருங்குகின்ற போதும் வன்னியின் வடுக்களைச் சுமந்தமக்களை நினைத்துப்பார்ப்போம்?
எல்லாத் துயரிற்கும் ஓர் முடிவு வேண்டுமல்லவா? எனவே எமதினம் தொடர்ந்து போராடினால் தான் முடிவையும் விடிவையும் காண முடியும். கடலடிப் பூகம்பம் கடலைத் தாண்டி ஆழிப் பேரலை வந்தது. சோறு தந்த கடலே தந்த துயரைப் பொறுக்கலாம் மன்னிக்கலாம். மீண்டும் கடலுடன் உறவாடலாம்.
குழந்தைகள் பெண்களென வயது வேறுபாடின்றி ஈழத் தமிழரை அறுபது ஆண்டுகளிற்கும் மேலாக சிங்களப் பேரினவாதிகள் அழித்தே வருகின்றனர். ஆழிப் பேரலையிலும் கொடுமையாகவே சிங்களப் பேரினவாதிகளின் கொடூர நடவடிக்கைகளை தமிழர் பார்க்கின்றனர்.
ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு எப்படிப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்களோ அதேபோன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாரால் செயற்பட முடியும்? 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட புலிகளின் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 சன. 2005 அன்று அழிவுகளைப் பார்வையிட வந்த யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் வெகுவாகப் பாராட்டினார்.
அமெரிக்காவில் ~சிக்காக்கோ றைபியூன|; பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது.
ஆழிப் பேரலையின் பின்னான மீள்கட்டுமான வேலைகளை நேரில் பார்த்தவர்களால் தான் புலிகளின் பணிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே சிங்களப் பேரினவாத அரசு வெளிநாட்டவர் புலிகளின் ஆழுகைக்குள் செல்வது உண்மைகளை அறிய உதவும் என்று தடுத்தது.
எனவே, ஆழிப் பேரலையின் பின்னான செயற்பாடுகளை வைத்தும் யார் மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். புலம் பெயர்ந்தவர்களே பல வழிகளிலும் உதவுகின்றீர்கள். அறிவியல் ரீதியாகவும் உங்களை வளர்த்து கடலெல்லை அதிகமாக உள்ள எமது நாட்டில் ஆழிப் பேரலையால் அழிவேற்படாமல் பாதுகாப்பது பற்றியும் கவனியுங்கள். பேரலையால் அள்ளுண்ட உயிர்களை எண்ணி!
No comments:
Post a Comment