டாக்டர் எலின் சான்டர்.போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டாக்டர்; கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார்.
வட அமெரிக்காவில் ஒரு மாநாட்டில், இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து, 'எலின் சான்டர் வெள்ளைக்கார தமிழச்சி' என்று வியந்தார்! இலங்கை அகதி முகாம்களில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கக் கோரி மெக்ஸிகோ நகரில் கடந்த 22-ம் தேதி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார், எலின் சான்டர்.
இவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து ஒரு கருத்தரங்கத்தில் பேச வைக்க வைகோவும், மா.நடராஜனும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசு இவருக்கு விசா வழங்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜூனியர் விகடன் செய்தியாளர் தொடுத்த வினாக்களும், சான்டர் வழங்கிய பதில்களும்:-
''இந்திய அரசால் உங்கள் விசா கடைசி நேரத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறதே..?''
''உண்மையில் இந்தியாவுக்கு வர ஒரு மாதம் முன்பே விசா கிடைத்து விட்டது. ஆனால், நான் புறப்படும் இரு தினங்களுக்கு முன்பு, விசா கேன்சல் (cancel) செய்யப்பட்டதாக போன். இந்தியாவில் இருக்கும் ஒரு மத்திய தமிழ் மந்திரியின் வற்புறுத்தலின் பேரில்தான் விசா கேன்சல் என கூறினார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
உலகில் வேறெங்குமே நடக்காத ஒரு கொடூரம், தமிழகத்திலிருந்து வெகு அருகில் உள்ள இலங்கையில் நடந்தும், அதற்க்கான எதிர்ப்பு இந்தியாவிலிருந்து எழவில்லை. இதற்கு பதில் கேட்கத்தான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். கடைசியில் தடுக்கப்பட்டேன். ஆனாலும் நான் இந்தியா வர போராடுவேன்..!''
''அமெரிக்கரான நீங்கள் அகதி முகாம்களில் வாடும் அப்பாவி தமிழர்களுக்காக போராட முன்வந்தது ஏன்?''
''இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி முகாமில் அடைத்து வைக்கப்பட்டு, பெரும் சித்ரவதைகளுக்குப் பிறகு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்தேன். தனிமரமானேன். உலகின் எந்த மூலையில் ஒரு குறிப்பிட்ட இனம் கொடுமைப்படுத்தப்பட்டாலும், அது என்னை பாதிக்கும். அந்த வலி தெரியும். முன்பு இலங்கையில் சுனாமி நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். அப்போது தமிழீழ மக்களின் அன்பும், மன தைரியமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களின் சொந்தக்காரியாகவே என்னை நினைக்கிறேன்.
இனப்படுகொலையால் அங்கே இறந்த ஈழத் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொருவரும் மகன், அப்பா, அம்மா என உறவுகளை இழந்து தவிப்பது பேரவலம். மே மாதத்தில் மட்டும் 30,000 அப்பாவி மக்களை தமிழினம் இழந்தது. பல்லாயிரக்கணக்கானோர், முடமாகியும் அநாதையாகியும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக நான் போராடுவதுதான் மனித நேயத்துக்கான சரியான அடையாளம்.''
''இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் உங்களுக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?''
''ஆம். பருவ மழை தொடர்ந்து பெய்வதால், இப்போது அகதி முகாம்களில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அம்மை நோய் பரவுகிறது. உணவு, சுகாதாரம் எதுவுமே அங்கே சரியாக இல்லை. வாரத்துக்கு 1,500 பேர் கொல்லப்பட்டு, முகாமின் வேலிகளுக்கு வெளியே திறந்த வெளியில் வீசப்படுகிறார்கள். யாராவது கேட்டால் சித்ரவதை செய்து கொன்று அவரையும் வீசிவிடுகிறார்கள். பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதோடு, உடைகளே தராமல் பிறந்த மேனியாக அலையவிட்டிருக்கிறார்கள்.
யுனிசெஃப்பின் வவுனியா மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் சிங்கள மருத்துவர்கள் ஊசி போட்டுக் கொன்று வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. எவரையும் தங்கள் குடும்பத்தோடு வைக்காமல், வெவ்வேறு முகாம்களில் பிரித்து, கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதுவரை முகாமில் 10 ஆயிரம் மக்கள் காணாமல் போயிருக்கின்றனர். எங்கு சென்றனர், என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை! என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே இதுதான் மிகப்பெரிய, கொடிய சிறைச்சாலை!''
''செஞ்சிலுவை சங்கத்தினருக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பும் மரியாதையும் இலங்கையில் கிடைக்கிறதா?''
''பல்வேறு பத்திரிகையாளர்களும், மனித உரிமைக் குழுவினரும் இலங்கையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது உலகத்துக்கே தெரியும். யுனிசெஃப், செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு துளிகூட பாதுகாப்பு கிடையாது. பல்வேறு யுனிசெஃப் பெண் பிரதிநிதிகள்கூட பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
போரில் சிக்கி உயிரிழந்தார்கள் என்று இலங்கை அரசு சொன்ன உதாரணங்களும் நிறைய இருக்கிறது. ஹிட்லரை விடவும் மோசமானவர் ராஜபக்ஷே. அதை நிரூபிக்கும்படியான சம்பவங்கள்தான் இலங்கையில் நடந்துகொண்டே இருக்கின்றன!''
''இலங்கை நிலவரம் குறித்து, ஒபாமா அல்லது ஹிலாரி கிளிண்டனிடம் பேசினீர்களா?''
''இருவரிடமும் பேசும் வாய்ப்பு அமையவில்லை. அமெரிக்க ஸ்டேட் செக்ரெட்டரி ராபர்ட் பிளேக்கிடம் இது குறித்து விரிவாகப் பேசினேன். அவர், ஒபாமாவிடம் பேசுவதாக கூறினார். விரைவில் இந்தப் பிரச்சினை குறித்து மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக என்னிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார் ராபர்ட்.''
''நீங்கள் பேசிய ஒரு சி.டி-யில் 'தமிழீழம் மலரும்' என்று கூறியுள்ளீர்கள். அதற்கான சாத்தியக்கூறு என்ன?''
''தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. இலங்கையை முழு சிங்கள தேசமாக மாற்றலாம் என்று வெறித் தாண்டவம் ஆடும் ராஜபக்ஷேவுக்கு, உலக நாடுகளிடமிருந்து மிகப்பெரிய கண்டனங்களும் ஆபத்துகளும் இனித்தான் வரப்போகின்றன.
குறிப்பாக, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும். பொறுத்திருந்து பாருங்கள்!''
''உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''
''கண்ணி வெடிகளைக் களையெடுக்கிறோம் என்ற பேரில் சிங்களவரை தமிழர் பகுதியில் குடியேற்றம் செய்துவரும் ராஜபக்ஷேவிடம், அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனே விடுவிக்கக் கோரி உலக நாடுகளை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்த இருக்கிறோம். இனியும் விடுதலைப் புலிகள் என்று அப்பாவி மக்களை சித்ரவதை செய்வதை அனுமதிக்கக் கூடாதென உலக நாடுகள் கிளர்ந்து எழும்.
இலங்கைக்கு செய்துவரும் இராணுவ, வாணிப ரீதியான உதவிகளை முடக்க உலக நாடுகளில் விழிப்பு உணர்வு மாநாடுகள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் இலங்கை அரசு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்!'' என்றார் எலின் சான்டர்.
No comments:
Post a Comment