Monday, October 12, 2009

வன்னியில் இருந்து தலைவரால் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தளபதி பால்ராஜ்


மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – பகுதி 02

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய காலப்பகுதியாக 2002ம் ஆண்டின் பின்னான காலப்பகுதி அமைந்துள்ளது. அதாவது சமாதான காலப்பகுதி என்று குறிப்பிடலாம். இந்தச் சமாதான காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகப் பகுதியான வன்னிப் பகுதிக்கு பல்வேறுபட்ட நாட்டுப் பிரமுகர்களின் வருகை, வேற்றின மக்களின் வருகை என்பன அதிகரித்திருந்த அதேவேளையில்தான், விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களின் ஊடுருவல்கள் என்பனவும் அதிகரித்திருந்தன.

இதனை முறியடித்து இவ்வாறானவர்களை கண்டறிந்து இந்த ஊடுருவல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழ் மக்கள் சிலரே இவ்வாறான துரோகத்தனங்களில் ஈடுபட்டிருந்ததால், சந்தேகத்துக்கு இடமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மக்களிடையே சில மனக்கசப்பும் ஏற்படத்தான் செய்தது.

எனினும், தாயகத்தின் பாதுகாப்பு என்ற வகையில் இந்த நடவடிக்கைக்கு பெருமளவு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான சிறீலங்கா அரசின் பொருளாதார தடை தளர்த்தப்பட்டது விடுதலைப் புலிகளும், வன்னி வாழ் மக்களும் பொருளாதார ரீதியான வளர்ச்சியை பெறுவதற்கு சற்று வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

ஆனால், இது மறைமுகமாக தமிழீழ விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் மறைமுகப் பாதிப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறு வன்னி மக்கள் மீதான பொருளாதாரத் தடை, சிறீலங்கா அரசால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள தங்களது நிர்வாக பகுதிகளுக்கும் பொருளாதார தடைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு விடுதலைப் புலிகளால் சிறீலங்கா படையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் எழுந்த அல்லது உருவாக்கப்பட்ட பிரச்சினைதான் மாவிலாற்றுப் பிரச்சினை. சிறீலங்கா அரச படைகளால் மாவிலாற்றில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் மாவிலாற்று நீர்ப் பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்போம்.

இயற்கையின் எழில் நிறைந்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. இயற்கைத் துறைமுகம், விமானப்படைத்தளம், எண்ணை சேமிப்புக் கிணறுகள்… என்று பல நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது காணப்படுகின்றது. விஞ்ஞானியான ஆதர் சீ கிளாக் அவர்கள் கூட, ஆசியாக் கண்டத்தில் திருகோணமலையை முக்கிய இடமாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது செய்மதி ஏவுதளம் அமைக்கக்கூடிய இடமாக திருகோணமலை விளங்குவதாக அவர் கணித்திருந்தார். அதேவேளை, பல்வேறு நாடுகளுக்கும் திருகோணமலையை முதன்மையான இடமாக கருதுகின்றன. இந்நிலையில், திருகோணமலையில் சில இடங்கள் சிறீலங்கா அரசால் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கும் விடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அமையப் பெற்ற இடத்தில் இருந்து கொண்டே விடுதலைப் புலிகள் 2003ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய துரோகத்தனத்தினை களைவதற்காக படை எடுத்து, அதில் வெற்றியும் பெற்றார்கள்.

கிழக்கில் இருந்து விடுதலைப் போராட்டத்தின் துரோகிகள் விரட்டி அடிக்கப்பட்டு பாதுகாப்பான நிலை கொண்டுவரப்பட்டதன் பின்னர் அங்கு விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் மீண்டும் செயற்படத் தொடங்கின. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் தொடக்கம் வெருகல் துறைமுகத்துவாரம் வரையான 50 கிலோ மீற்றர் கரையோரப்பகுதி விடுதலைப் புலிகளின் திறமைமிக்க நிர்வாக பகுதிகளில் ஒன்றாக விளங்கியது.

பல கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் விவசாயத்தையும், கடல் தொழிலையும் தமது தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கல்வியில் சற்று குறைவான நிலையே இங்கு காணப்பட்டது. இம்மக்கள் தமது அன்றாட பொருட்களைக் கூட சிறீலங்கா படையினரின் பிரதேசங்களுக்குள் சென்றே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. சம்பூர் மக்கள் கட்டைபறிச்சான் பொலிஸ் சோதனை நிலையம் ஊடாகவும், ஈச்சிலம்பற்று, வெருகல் கிராம மக்கள் சேருநுவர படை சோதனை நிலையம் ஊடாகவும், கதிரவெளி மக்கள் வாளைச்சேனை படைச் சோதனை நிலையம் ஊடாகவும் சென்றே பொருட்கள் பெறவேண்டும்.

ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களை மாத்திரம் கொண்டு செல்லலாம். பெருமளவு பொருட்கள் எடுத்துச்சென்றால் அவர் படையினரால் சந்தேகப்பட்டு விசாரிக்கப்படுவார். இவ்வாறு அங்குள்ள மக்களுக்கான பொருளாதார தடை சிறீலங்காப் படையினரால் போடப்பட்டிருந்தது. இவற்றின் மத்தியில்தான் விடுதலைப் புலிகள் தமது நிர்வாகத்தை அங்கு நடத்தினார்கள். காட்டுவழியாகவும், கடல்வழியாகவும் பொருட்களைக் கொள்வனவு செய்தே விடுதலைப் புலிகள் தங்கள் நிர்வாகத்தை நடத்தினார்கள்.

அங்கு பல பயிற்சித் தளங்களை நிறுவினார்கள். பலநூறு புதிய போராளிகளை உருவாக்கினார்கள். மறைமுகமாக விடுதலைப் புலிகளின் கடற்படைத்தளங்கள் அங்கு நிறுவப்பட்டன. இதன் பிரகாரம் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதத் தளபாடங்கள் கப்பல் வழியாக திருகோணமலையில் ஒரு தொகுதி இறக்கப்படுகின்றது. இவ்வாறு அங்கு கடற்புலிகளின் நிலைப்படுத்தல் உயர்ந்துகொண்டு சென்றது.

இதனாலேயே, விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படும் காலப்பகுதியாக 2003ம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதி அமைந்தது. கடற்புலிகளின் பலமே விடுதலைப் புலிகளின் பலம் என்றும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பலமான அணியாக கடற்புலிகளின் அணி செயற்பட்டது. இது சிறீலங்காக் கடற்படைக்கு மாத்திரமல்ல, தரைப்படைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்தது. தங்களுக்கான படையினர் பலத்தை பெருக்கிக்கொண்டும், ஆயுத தளவாடங்களை கொள்வனவு செய்துகொண்டுமிருந்த சிறீலங்காப் படையினருக்கு விடுதலைப் புலிகள் தங்கள் படை பலத்தை பெருக்குகின்றார்கள் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனால், தமது இராணுவ முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மறைத்துக்கொண்டு, விடுதலைப் புலிகள் சமாதான காலத்திலும் ஆயுதக் கொள்வனவிலும், புதிய போராளிகளை இணைப்பதிலும் ஈடுபடுகின்றார்கள் என்று குற்றம்சாட்டினார்கள். இதன் ஒரு கட்டமாக எழுந்த அழுத்தம் காரணமாக, சமாதானத் தூதுவர்களாக இருந்த நோர்வேயின் சமாதான அதிகாரிகள் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்படையின் படகுக் கட்டுமானங்களை நேரில் சென்று பார்வையிடுகின்றார்கள்.

கடற்புலிகள் தமது படகுகளின் வடிவங்களையும் தாக்குதல் படைகளையும் படகு கட்டுமானங்களையும் அவர்களுக்கு காட்டியதோடு கடலில் அதன் செயற்பாடுகளையும் செய்து காண்பித்தார்கள். இவை தொடர்பான தகவல்கள் சிறீலங்கா கடற்படையினரை சென்றடைகின்றன. இதேநேரம், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ படகுசேவை ஊடாகவும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் பலத்தினை சிறீலங்கா படை புலனாய்வாளர்கள் ஆராய்கின்றார்கள்.

அத்துடன், சிறிய சிறிய படகுகளில் சென்று எதிரிக்கு பாரிய இழப்பினைக் கொடுக்கலாம் என்பதையும் ஏற்கனவே கடற்புலிகள் வெளிப்படையாகக் காட்டியிருந்தார்கள். இதன் பிரகாரம், புதிதாக சிறீலங்கா கடற்படையின் தரை இறக்கும் படகணிப் படகுகள் கடற்புலிகளின் சிறிய ரகத் தாக்குதல் படகு போன்ற வடிவத்தில் உருவாக்குகின்றார்கள். அவைதான் பின்நாளில் கடற்புலிகளுடன் மோதிய அரோ வகைப் படகுகள்.

கடற்புலிகளின் படகுகளை பார்த்தே இந்தப் படகுகளை சிறீலங்காப் படையினர் வடிவமைத்துக் கொண்டார்கள். இந்த அரோ வகைப் படகுகளில் சில நவீன வசதிகளை சிறீலங்காக் கடற்படையினர் ஏற்படுத்தினார்கள். இதன் நவீன கட்டுமானத்திற்கு ஜப்பான் நாட்டின் உதவி கிடைத்திருந்தது. இவ்வாறான சுமார் நூறு வரையான அரோ படகுகளை கடற்புலிகளை எதிர்ப்பதற்காக என்றே சிறீலங்காப் படையினர் உருவாக்கியிருந்தார்கள்.

இதேநேரம், கிழக்கில் திருகோணமலையில் பல அரசியல் பணிகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள். சமாதான காலத்தைப் பயன்படுத்தி சம்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் போன்ற பிரதேசங்களில் வீதிகள், பாலங்கள் புனரமைக்கப்படுகின்றன. இந்தப் புனரமைப்பிற்கு சிறீலங்கா அரசே உதவுகின்றது. இதனுாடாக படையினர் விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளை கண்காணிக்கிறார்கள். இதனிடையே ஒட்டுக்குழுக்களின் துரோகத்தனமும், ஊடுருவல்களும் தலைதூக்குகின்றன. இவற்றையும் விடுதலைப் முறியடிக்கின்றார்கள்.

இந்த முறியடிப்பில் திருகோணமலை மாவட்டத்தின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராக மாவீரர் லெப்.கேணல் அறிவு திறம்பட செயற்படுகின்றார்.அத்துடன், அங்குள்ள மாவீரர் குடும்பங்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலை செல்லாத வறிய மாணவர்கள் இனம்காணப்பட்டு கல்வி கழகம் ஊடாக அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இனம்காணப்பட்டு உயர்தரம் படித்த மாணவர்கள் தொண்டர் ஆசிரியர் ஊடாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

மருத்துவ பிரச்சினை இனம் காணப்பட்டு வன்னியில் இருந்து தியாகதீபம் திலீபன் மருத்துவ சேவையினை வரவழைக்கப்பட்டு மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு, மக்களின் நோய்கள் தீர்க்கப்படுகின்றன. கடற்புலிகளின் ஏற்பாட்டில் சங்கங்கள் ஊடாக கடற் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு, தொழில் வாய்ப்பு ஊக்குவிக்கப்படுகின்றது. சம்பூர் வெருகல் பிரதேச மக்கள் வளமான மக்களாக மாற்றம் கண்டு வந்துகொண்டிருந்தார்கள். அத்துடன், பொருண்மிய கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது.

மக்களின் சீர்திருத்தத்தை கண்காணிக்க (தமிழீழ காவல்துறை தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியது) நீதி, நிர்வாகம் அங்கு கொண்டு செல்லப்படுகின்றது. மக்களிடையேயான பிணக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்கின்றன. பிரச்சினைகள் களையப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் இந்த சீரான நிர்வாகக் கட்டமைப்பு அயல் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் அவமானத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றது.

இதனால் சில சிங்கள கிராமத்தின் முதன்மையானவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்களுடன் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டார்கள். மூதூரைப் பொறுத்தமட்டில் மூதூர் இஸ்லாம் மக்களைக் கொண்ட நகரமாக காணப்படுகிறது. தமிழ் – முஸ்லீம் மக்களிடையேயான பிரச்சினைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தீர்க்கப்பட்டு, இரு பகுதியிருக்கும் இடையிலான உறவு அங்கு வளர்க்கப்படுகின்றது.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் கட்டுமானங்கள் அங்கும் திறம்பட செய்படுகின்றன. இந்நிலையில், வன்னியில் இருந்து தளபதி பால்ராஜ் தலைவரால் திருமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.

(தொடரும்…)

நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment