Monday, August 31, 2009

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை தற்போதை சூழ்நிலையில் எவருக்கும் எந்த நீதியும் கிடைக்காது!! - வாதியின் சட்டத்தரணி

425 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுட்ரீச் இணையத்தளத்தின் பிரதமர ஆசிரியர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (ஆக.31) 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இனவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 2008ம் ஆண்டு மார்ச் 7ம் திகதி திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

திஸ்ஸநாயகம் மீது சுமத்தப்பட்டிருந்த முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்காக தலா 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 10 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவம் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் ஷஅவுட்ரீச்| இணையத்தளத்தில் இரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருந்ததாக சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கட்டுரைகளில், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை விநியோகிக்காமல் மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிப்பதற்காக அரசாங்கப் படைகள் முயற்சிப்பதாக திஸ்ஸநாயகம்


எழுதியிருந்ததாக சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிக்கை செய்தார். இதன்மூலம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாக நீதிமன்றத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் நீண்டதொரு அறிக்கையைச் சமர்ப்பித்து வாதி மீது சாட்டப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்து வாதிட்டார்.

தான் எவ்விதமான வாதத்தை முன்வைத்த போதிலும், திஸ்ஸநாயகத்திற்கு எதிரான தீர்ப்பை நீதிபதி குறித்துக் கொண்டுவந்திருப்பதால் தமது கருத்துக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கூறினார். மேல் மாகாணத்தின் பிரதான நீதிமன்றத்தின் பிரதான நீதவானான உங்களிடம் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்வது என்னவெனில் தண்டனை வழங்கும்போது மனித நேயம் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் ஒரு நியாயத்தை எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் இனவாதியல்ல. அவர் 80ம் ஆண்டு காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும், அவர்கள் சார்பில் கட்டியெழுப்பப்பட்ட அரசியல் தலைமை சார்பிலும், காணாமற்போன பிள்ளைகளின் பெற்றோர் சங்கத்துடனும், அந்தக் காலத்தில் ஊழியர்களின் புரட்சி சார்பிலும் பணியாற்றியதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.

மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம், ஜே.வி.பி. மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சார்பாக சேவை அடிப்படையில் முன்நின்று திஸ்ஸநாயகம் பணியாற்றியதாகவும் அனில் டி சில்வா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

போரினால் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலை தற்போது துயரமானது. இவர்களுக்காக ஏதேனும் செய்ய முயற்சித்தால் தாம் கவலைக்கிடமான நிலையைச் சந்திக்க நேரிடும் எனவும் வாதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.

80ம் ஆண்டு காலப்பகுதியில் ஊழியர்கள் சார்பில் குரல் கொடுத்த குற்றத்திற்காக திஸ்ஸநாயகம் தமது தொழிலை இழந்தார். இன்று தமது இனத்தின் சார்பில் குரல் கொடுத்த குற்றத்திற்காக சுதந்திரத்தை இழந்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர், நிரபராதி என்ற தீர்ப்பிற்கு நீதிமன்றம் இணங்கினாலும் இணங்காவிட்டாலும், திஸ்ஸநாயக்கம் ஒருவருடமும் ஐந்து மாதங்களும் விளக்கமறியலில் சட்டவிரோதமான முறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள மொழி மற்றும் கருத்துச் சுதந்திரம் சிங்கள இனத்திற்கு மாத்திரமின்றி, தமிழரான திஸ்ஸநாயகத்திற்கும் கிடைக்க வேண்டுமெனவும், இனவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கு அவர் ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், சிவப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு, உலகத்தைப் பார்க்கும் பொய்யான தேசப்பற்றாளர்களுக்கு திஸ்ஸநாயகம் மாத்திரமன்றி, உலகில் நிகழும் அனைத்தும் தவறாகவே புலப்படும் எனவும் வாதி சார்பில் வாதிட்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிக்கையிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், திஸ்ஸநாயகம் ஒரு தமிழர் என்பதால் கைதுசெய்யப்பட்டதாகவும், தற்போதைய சூழ்நிலையில், எவருக்கும் எந்த நீதியும் கிடைக்காது எனவும் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக சட்டம் செயற்பட்ட விதமானது ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் நல்லதொரு பாடத்தைக் கற்பித்துள்ளதுடன், இதன்பின்னர் எதனையும் எழுதாமல் இருக்குமாறு ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்க நேரிட்டுள்ளதாகவும் வாதியின் வாதத்தை முடித்துக் கொண்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த ஏராளமானோர் சமுகமளித்திருந்ததுடன், அரசியல்வாதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

Saturday, August 29, 2009

உலகில் அதிகளவு காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணி

உலகில் அதிகளவு காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2000மாம் ஆண்டு முதல் நூற்றுக் கணக்கானோர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக தெரியவருவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச் செயல்களை யார் மேற்கொள்கின்றார்கள் என்பதனைவிடவும் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுப்பதே மிகவும் முக்கியமானதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் வரிசையில் அதிகளவு ஊடகவியலாளர்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Friday, August 28, 2009

வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் அம்பாறையில் சுட்டுக்கொலை

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் கடந்த 25ம் திகதி இரவு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களும் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது.

இவர்கள் கடந்த 17ம் திகதி வவுனியா முகாமிலிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாக சக உறவினர்களிடம் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர். இதன் பின்னர், அந்த உறவினர்கள் தமது இரண்டு உறவினர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து முகாம்களில் தொண்டுப் பணியில் ஈடுபட்டுள்ள செடெக் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து அந்த அமைப்பினர் தமது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லையென அறியப்படுகிறது.

செடெக் நிறுவனத்தில் உள்ள இலங்கைத் தலைவரான டேமியன் பெரேரா என்ற கத்தோலிக்க மதகுரு மாலை வேளைகளில் ஜனாதிபதியின் நண்பர் சமுகத்துடன் விருந்துகளில் கலந்துகொள்பவர் எனத் தெரியவருகிறது. எனவேதான், இதுகுறித்து எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ்விருவரும் விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளில், மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பயிற்சி கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஜாமடீன் கொலையுடன் இவர்கள் நேரடியாக தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறை அத்தியட்சகர் கடந்த ஏப்ரல் 5ம் திகதி கல்முனை மருதமுனைப் பகுதியிலுள்ள பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

கந்தபோடி மற்றும் சீலன் ஆகியோரே இவ்வாறு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கந்தபோடியின் மனைவி ஒரு சிங்களப் பெண். இவர் கைதுசெய்யப்பட்ட விசாரணை செய்தபோது வெளியான தகவல்களுக்கமையவே கந்தபோடி வவுனியா முகாமில் மறைந்திருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Thursday, August 27, 2009

செப்டம்பர் 9ம் திகதிக்குப் பின்னர் அரசாங்கத்திற்கு நேரம் கூடாது.

ஜோதிட கணிப்புக்களுக்கமைய செப்டம்பர் 09ம் திகதிக்குப் பின்னர் அரசாங்கத்திற்கு மட்டுமல்லாது ஆட்சியாளர்களின் நேரமும் கூடாதுள்ளது. இந்த நிலையில், கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாவிடின், அரசியல் ரீதியாக பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் தொழில் அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மலிக் சமரவீக்ரமவிற்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் காமினி அத்துகோரலவின் மகளின் திருமண வைபவம் கொழும்பு சினமன் கார்டின் விடுதியில் நடைபெற்ற போதே அமைச்சர் மேர்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார்.இந்த திருமண வைபத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் அமைச்சர்களும், அரசியல் வாதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் சமல் ராஜபக்~ களமிறக்கப்படுவது குறித்தே இந்த வைபவத்திற்கு வந்திருந்த அனைத்து அரசியல் வாதிகளும் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்ட விடயமாகவிருந்தது.

இவ்வாறு சமல் ராஜபக்~ இரத்தினபுரி மாவட்டத்தில் களமிறக்கப்படுவாராயின், அரசியல் ரீதியாக தாம் தீர்மானத்தை எடுக்க நேரிடும் என மிகவும் ஆவேசமாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம், அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த பவித்ரா வன்னியாராச்சி, நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

தென் மாகாணத்தில் களமிறக்கப்பட்டுள்ள கவர்ச்சி நடிகை அனார்கலி ஆகர்~hக்கு, ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் புதல்வர் நாமல் மற்றும் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் நடிகைகள் காய்ச்சல் (மேனியா) குறித்து இங்கு வந்திருந்த அரசியல் வாதிகளின் வாயில் முனுமுனுக்கப்பட்ட மற்றுமொரு விடயமாகவிருந்தது.

Wednesday, August 26, 2009

தமிழருக்கான விடுதலை இது தானா?


தமிழீழ
விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

தமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.

காணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

Sunday, August 16, 2009

புலம்பெயர் தமிழர் விவகாரம்

இலங்கை வரலாற்றில் ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 கறுப்பு ஜூலைக்குப் பிறகு சொந்த நாட்டில் தங்கள் எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்றவர்களாக வெளியேறிய பெரும் எண்ணிக்கையான தமிழர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் இன்று உலகின் பல நாடுகளில் நவீன யூதர்கள் போன்று வாழ்ந்து வருகின்றார்கள். சுமார் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின்போதும் பாதுகாப்புத் தேடி ஆயிரக் கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தொடர்ச்சியாகப் புலம்பெயர்ந்தனர். அதிகப் பெரும்பான்மையான தமிழர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமே வாழ்கிறார்கள். தமிழர்களின் இந்தக் கால் நூற்றாண்டு காலப் புலம்பெயர்வையடுத்து தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்துக்கும் அதிகமானதாகும் என்பதில் சந்தேகமில்லை. உள்நாட்டுப் போரில் தங்கள் இனத்தவர்கள் இலங்கையில் அனுபவிக்க வேண்டியிருந்த அவலங்களுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். இவர்களில் சகலருமே இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் வழி நடத்தப்பட்ட முறையை முற்று முழுதாக ஆதரித்தவர்கள் என்றும் கூறிவிட முடியாது. சகல சமூகங்கள் மத்தியிலும் காணப்படுவதைப் போன்று வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் வேறுபட்ட அரசியல் கருத்துகளும் சிந்தனைகளும் நிலவவே செய்கின்றன. போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒரு அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இன்று கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லை. அத்தகைய தொரு சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் சமுதாயமும் கூடுதல் கரிசனை கொண்டு எச்சரிக்கை உணர்வுடன் செயற்பட ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

உள்நாட்டில் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அழைப்பை விடுக்கின்ற அரசாங்கம் அதே தமிழ் மக்களின் இரத்த உறவுகளான புலம் பெயர் தமிழர்களுடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டியது அவசியமாகும். கடந்த மே மாத நடுப்பகுதியில் போர் முடிவடைந்ததையடுத்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு பகுதிகளை புனர்நிர்மாணஞ் செய்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு உதவுமாறு புலம் பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து அந்த வேண்டுகோளுக்கு அனுகூலமான பிரதிபலிப்பு பரந்தளவில் வெளிக்காட்டப்படக் கூடியதாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை நோக்கிய செயன் முறைகளில் உருப்படியான நகர்வுகள் இல்லை என்பது எமது அபிப்பிராயம். அதேவேளை புலம்பெயர் தமிழர்களை ஒட்டு மொத்தத்தில் விரோதிகளாக நோக்கும் அணுகுமுறையை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் கணிசமான பிரிவினர் கடைப்பிடிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. போர் முடிவடைந்து விட்டாலும் அந்தப் போருக்கான அடிப்படைக் காரணியான இனநெருக்கடியின் விளைவாக சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையின் நிகழ்வுப் போக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அகவுணர்வுகளுக்கு அப்பால் சிந்தித்து ஏற்றுக்கொள்வதே உண்மையில் ஆரோக்கியமானதாக இருக்கும்.

இத்தகையதொரு பின்புலத்திலே தான் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் றொபேர்ட் பிளேக் இவ்வாரம் அமெரிக்காவில் உள்ள புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது வெளியிட்ட கருத்துகளை நோக்க வேண்டியிருக்கிறது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜேம்ஸ் மூர் சகிதம் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக ஆராய்ந்த பிளேக் அரசியல் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார். நிலையான சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்கு அதிகாரப்பரவலாக்கலை செய்வதற்கும் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கும் புதியதொரு பொறி முறையை இலங்கை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள தமிழர்களுடன் மாத்திரமல்ல புலம் பெயர் தமிழ்ச் சமூகத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி நல்லிணக்கத்துக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியிருப்பதாகவும் பிளேக் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து வரக்கூடிய பிரதிபலிப்பை அறியக் காத்திருப்போம்.

அதேவேளை, கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் தயா பெரேரா கனடாவில் வாழும் தமிழர்கள் தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துகள் எமது கவனத்தை வெகுவாக தூண்டியிருக்கின்றன. "இலங்கையில் இருந்து தமிழ் பேசும் மக்களை அகதிகளாக வருவதற்கு அனுமதித்ததற்காக கனடிய அரசாங்கம் ஒரு நாள் வருத்தப் படும். மனித உரிமைகளை பேணிக்காத்து மேம்படுத்துவதில் கனடா பெருமைப்படுகிறது. ஆனால், இலங்கையில் இருந்து கனடாவுக்கு வந்திருக்கும் தமிழர்கள் இறுதியில் எதிர்காலத்தேர்தல்களில் முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளாக மாறுவார்கள் என்பதை கனடிய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்' என்று பிரபல சட்ட நிபுணரான தயாபெரேரா கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றின் இணையத்தளத்துக்கு தெரிவித்திருக்கிறார். அகதிகளாக கனடாவுக்கு தமிழர்கள் பெருமளவில் வருவதற்கு அனுமதிப்பது கனடியர்கள் நாளடைவில் பெரும் அரசியல் பிரச்சினைகளை எதிர் நோக்குவதற்கு வழிவகுக்கும் என்பதே இலங்கை உயர்ஸ்தானிகரின் செய்தியாகும். பல்இன, பல்கலாசார சமுதாயமொன்றில் மற்றையவர்களின் அபிலாசைகளையும் உணர்வுகளையும் மதித்து பரஸ்பர விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் சமாதான சகவாழ்வை முன்னெடுப்பதில் இலங்கையில் உள்ள ஒருபிரிவினருக்கு இருக்கின்ற சிக்கலே இதுவரையான நெருக்கடிகளுக்கெல்லாம் காரணம். இத்தகைய ஆரோக்கியமற்ற சமூகச் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு கனடாவில் தமிழர்கள் அனுமதிக்கப்படுவதைப் பொறுக்க முடியவில்லை. அதன் தவிர்க்க முடியாத வெளிப்பாடே தயாபெரேராவின் கருத்து. கனடாவின் வரலாற்றை தயா பெரேரா அறியாதவர் அல்லவென்று நம்புகின்றோம். ஆனாலும், அவருக்கு ஒரு சம்பவத்தை மாத்திரம் நினைவுபடுத்த இச் சந்தர்ப்பத்தில் விரும்புகின்றோம்.

1980 களின் நடுப்பகுதியில் மேற்குஜேர்மனியிலிருந்து மூன்று படகுகளில் இலங்கைத் தமிழ் அகதிகள் (பெண்களும் கைக்குழந்தைகளும் உட்பட) நூறுக்கும் அதிகமானவர்கள் கனடாவின் நியூபவுண்ட்லாந்து கரையோரமாக வந்து கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது கனடிய கரையோரக் கடல்படையினரால் காப்பாற்றப்பட்டனர். அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைத்த கனடிய அதிகாரிகள் அவர்களுக்கு தஞ்சம் வழங்குவதா இல்லையா என்பது குறித்துப் பரிசீலனை செய்துகொண்டிருந்தபோது இலங்கையில் இருந்து பல்வேறு இனவாத அமைப்புகள் (சில பௌத்தபிக்குமார் உட்பட) அந்த அகதிகளுக்கு கனடா தஞ்சமளிக்கக்கூடாதென்று கிஞ்சித்தேனும் இரக்கமின்றி கோரிக்கைவிடுத்தன. கனடிய பாராளுமன்றத்திலும் அகதிகள் பிரச்சினை கிளப்பப்பட்டது.அதற்குப் பதிலளித்த அப்போதைய பிரதமர் பிறையன் மல்றோனி அளித்த பதில் என்ன தெரியுமா? "கனடா குடியேற்ற வாசிகளின் நாடுதான். படகில் வந்த மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டியது எமது கடமை'.

நன்றி தினக்குரல்

Thursday, August 13, 2009

இலங்கை விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறை நீக்க நடவடிக்கை

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 'விசா' வழங்கும் நடைமுறையை நீக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ள யோசனையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.

இவ்வாறு விமானநிலையத்தில் வைத்து விசாவை வழங்குவதற்குப் பதிலாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்கள் ஊடாகவே விசாவை வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு சிபாரிசு செய்துள்ளது.

உல்லாசப் பயணிகள் என்ற பெயரில் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு இவ்வாறு விசா வழங்கும் நடைமுறை வழிவகுப்பதாக அமைந்துவிடலாம் என்பதால் இம்முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.

உல்லாசப் பயணிகளின் அதிக வரவுக்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் போது இலங்கைக்குள் நுழைவதற்கான விசாவை வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அண்மைக்காலத்தில் உல்லாசப் பயணிகள் என்ற பெயரில் வந்த 309 வெளிநாட்டவர்கள் வேறு நோக்கங்களுக்காக வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களை புகைப்படும் எடுக்கும் திட்டமொன்றை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

உல்லாசப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டிற்குள் உட்பிரவேசிக்கும் நபர்கள் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவர்களை அடையாளம் காண்பதற்காக புகைப்படங்கள் எடுக்க திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.