Sunday, July 26, 2009

இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஜகத் ஜயசூரியவை கைதுசெய்ய திட்டமிருந்துள்ளது

ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவியமர்த்தப்படுவதற்கு முன்தினம் இரவு, அவரது வீட்டை சுற்றிவளைத்த இராணுவக் காவல்துறைப் பிரிவினர், ஜகத் ஜயசூரிய மற்றும் அவரது பாரியார், இரண்டு பிள்ளைகள் உட்பட வீட்டிலிருந்த அனைவரையும் கைதுசெய்துள்ளனர்.

அந்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்தன.

ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க முக்கியஸ்தர் ஒருவரினால் சரத் பொன்சேகாவிற்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாகவே இராணுவக் காவல்துறையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜகத் ஜயசூரியவின் வீட்டை சோதனையிட்ட போது, அங்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தங்கவைக்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு ஜகத் ஜயசூரியவைக் கைதுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இதன்மூலம் ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதைத் தடுப்பதே இதன் நோக்கமெனவும் கூறப்படுகிறது.

அத்துடன், ஜகத் ஜயசூரிய இவ்வாறு கைதுசெய்யப்பட்ட செய்தியை உடனடியாக வெளியிடுமாறு, தமக்கு நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளர்களுக்கு முன்னரே சரத் பொன்சேகா அறிவித்திருந்ததாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், ஜகத் ஜயசூரிய உட்பட வீட்டார் கைதுசெய்யப்பட்ட அச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்~வுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜகத் ஜயசூரிய, இதுகுறித்து தகவலளித்துள்ளார். அதன்பின்னர், இராணுவக் காவல்துறையினருடன் உடனடியாக தொடர்புகளை மேற்கொண்ட கோதாபய ராஜபக்~, கைதுசெய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் இராணுவத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

No comments:

Post a Comment