Thursday, June 3, 2010

தென் ஆப்பிரிக்காவின் இனவெறி விடுதலையானது இப்போது கால்பந்துப் போட்டியுடன் நிறைவடைகிறது


ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெறப் போகும் முதலாவது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரை கண்டு ரசிக்க ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளும் உற்சாகத்துடன் தயாராகியுள்ளது. குறிப்பாக இனவெறியால் பாதிக்கப்பட்டு புண்பட்டுப் போன தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டித் தொடரை மிகவும் பெருமையான ஒன்றாக கருதுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறவிருப்பது குறித்து போட்டி அமைப்புத் தலைவர் டேனி ஜோர்டான் கூறுகையில், 1990ம் ஆண்டு நெல்சன் மண்டேலா நீண்ட சிறைவாசத்திலிருந்து விடுதலையான பின்னர் இப்போதுதான் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை முழுமை பெறுகிறது.

நெல்சன் மண்டேலா விடுதலையானது முதல் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவின் இனவெறி விடுதலையானது இப்போது கால்பந்துப் போட்டியுடன் நிறைவடைகிறது.

இடையில் 1994ம் ஆண்டு முதலாவது பல்வேறு இனக்குழுக்கள் சுதந்திரமாக பங்கேற்ற தேர்தல் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இப்போது இன்னும் ஒரு முக்கியச் சம்பவமாக, வரலாற்று நிகழ்வாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளதை பெருமையாக கருதுகிறோம்.

மண்டேலா சிறையிலிருந்து வெளியே நடந்து வந்தபோது எதிர்கால தென் ஆப்பிரிக்கா எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் கற்பனை செய்து பார்த்தோம். இன்றும் உலக நாடுகளின் புகழ் பெற்ற கால்பந்து அணிகளும், அதன் வீரர்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் இங்கு வந்து குழுமியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இதுதான் உண்மையான விடுதலை என்று ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் கருதுகிறது. இதற்குத்தான் நாங்கள் கனவு கண்டு வந்தோம் என்றார் ஜோர்டான்.

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர்தான், தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடரை நடத்த தீவிரம் காட்டியவர்.

இதுகுறித்து பிளாட்டர் கூறுகையில், மனிதகுல வரலாற்றின் பக்கங்களில் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. விளையாட்டுலகில் மட்டுமல்லாமல், மனிதகுல வரலாற்றிலும் இது முக்கியமான நிகழ்வாகும் என்றார்.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவும் உலகக் கோப்பைப் போட்டி குறித்து பெரும் உற்சாகத்துடன் உள்ளார். ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதலாவது உலகக் கால்பந்துப் போட்டி குறித்து அவர் கூறுகையில்,இதை நாங்கள் ஆப்பிரிக்க உலகக் கோப்பை என்றே கூறுகிறோம். அதில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.

இனவெறியால் பல காலமாக துண்டாடப்பட்டு பொலிவிழந்து கிடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பைப் போட்டி என்பது மிகப் பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.

இனவெறி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா பல்வேறு துறைகளில் சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. சீரான வளர்ச்சியுடன் கூடிய பொருளாதாரம், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களில் சிறப்பிடம், பல இனக்குழுக்களுக்கிடையே நிலவி வரும் ஆரோக்கியமான நல்லுறவு என பலவற்றைச் சொல்லலாம்.

தென் ஆப்பிரிக்காவில் கால்பந்து விளையாட்டு பிரபலமானது 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில். 1879ம் ஆண்டு அங்கு முதலாவது அங்கீகரிக்கப்பட்ட கால்பந்து கிளப் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் பீட்டர்மாரிட்ஸ்பர்க் கன்ட்ரி என்பதாகும். அந்த அணியினர் ராணுவ குழுக்களுடன் மட்டுமே கால்பந்து ஆடி வந்தனர். மேலும் ஐரோப்பியர்களும், வெள்ளையர்களும் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

1882ம் ஆண்டில் நேடால் கால்பந்து சங்கம் தொடங்கப்பட்டது. இதில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் கன்ட்ரி, நேடால் வாஸ்ப்ஸ், டர்பன் ஆல்பா, உம்கனி ஸ்டார்ஸ் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றிருந்தன. பின்னர் பத்து கிளப்களாக தென் ஆப்பிரிக்காவில் கால்பந்து வளர்ச்சி பெற்றது.

1882ம் ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் தொடங்கப்பட்டது. பின்னர் அது கால்பந்து சங்கம், தென் ஆப்பிரிக்கா என பெயர் மாற்றப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா என்ற பெயரிலான தேசிய அணி முதல் முறையாக 1897ம் ஆண்டும் தொடர்ந்து 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேய கிளப் அணிகளுடன் நடந்த போட்டிகளில் மோதியது.

தென் அமெரிக்காவுக்கும் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி சென்று போட்டிகளில் கலந்து கொண்டது. அப்போது படகு மூலமாக அட்லான்டிக் கடலில் சென்று இந்த அணி தென் அமெரிக்காவை அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அவர்களுக்கு 9 வாரங்கள் பிடித்ததாம். முதலில் பிரேசிலிலும், பின்னர் உருகுவே, அர்ஜென்டினாவிலும் தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி விளையாடியது.

பியூனஸ்அயர்ஸில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவை 4-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது அந்த அணியின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி கடைசியாக ஆடிய சர்வதேச போட்டி 1954ல் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த போட்டிதான். பின்னர் தென் ஆப்பிரிக்க விளையாட்டுத்துறைக்கு உலக நாடுகள் இனவெறியைக் காரணம் காட்டி தடை விதித்து விட்டன.

இந்த நிலையில் 1959ம் ஆண்டு தொழில்முறைகால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் அறிமுகமானது. தேசிய கால்பந்து லீக் என்ற பெயரில் அது அமைந்தது. அதில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். ஆனால் அதில் ஒருகிளப் கூட இப்போது இல்லை.

இந்த 12 கிளப்களும் ஆடிய அனைத்துப் போட்டிகளுக்கும் பெரும் திரளான ரசிகர்கள் வந்தனர். 1970ம் ஆண்டுவரை இந்த கிளப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.

1971ம் ஆண்டு தேசிய தொழில்முறை கால்பந்து லீக் அமைப்பு உருவானது. அந்த அமைப்பின் சார்பில் நடந்த முதல் போட்டித் தொடரில் ஆர்லான்டோ பைரேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. தற்போது இந்த அமைப்பு பிரீமியர் சாக்கர் லீக் என்ற பெயரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தென் ஆப்பிரிக்க கால்பந்து சங்கம் உருவானது. இந்த அமைப்புதான் தேசியஅளவிலான கால்பந்து சங்கமாக உருவெடுத்தது. இந்த அமைப்புடன் கால்பந்து சங்கம், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க கால்பந்து கழகம், தென் ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், தென் ஆப்பிரிக்க தேசிய கால்பந்து சங்கம் ஆகியவை இணைந்தன.

1992ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளன உறுப்பினராக முன்னேற்றம் கண்டது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் மீண்டும் உலக கால்பந்து விளையாட்டு அரங்கில் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா.

அதன் பின்னர் தனது கடும் உழைப்பால், 1998ல் பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இடம் பெற்றது தென் ஆப்பிரிக்கா. தொடர்ந்து 2002 உலகக்கோப்பை போட்டியிலும் இடம் பெற்றது.

தற்போது உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் மிகப் பெரிய பெருமையைப் பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

எனவேதான் இந்த உலகக்கோப்பைப் போட்டியை தென் ஆப்பிரிக்காவின் பெருமையாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவின் பெருமையாகவும், கெளரவமாகவும் ஆப்பிரிக்கர்கள் கருதுகின்றனர்.

1 comment:

  1. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete