Sunday, July 26, 2009

இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஜகத் ஜயசூரியவை கைதுசெய்ய திட்டமிருந்துள்ளது

ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவியமர்த்தப்படுவதற்கு முன்தினம் இரவு, அவரது வீட்டை சுற்றிவளைத்த இராணுவக் காவல்துறைப் பிரிவினர், ஜகத் ஜயசூரிய மற்றும் அவரது பாரியார், இரண்டு பிள்ளைகள் உட்பட வீட்டிலிருந்த அனைவரையும் கைதுசெய்துள்ளனர்.

அந்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்தன.

ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க முக்கியஸ்தர் ஒருவரினால் சரத் பொன்சேகாவிற்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாகவே இராணுவக் காவல்துறையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜகத் ஜயசூரியவின் வீட்டை சோதனையிட்ட போது, அங்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தங்கவைக்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு ஜகத் ஜயசூரியவைக் கைதுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இதன்மூலம் ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதைத் தடுப்பதே இதன் நோக்கமெனவும் கூறப்படுகிறது.

அத்துடன், ஜகத் ஜயசூரிய இவ்வாறு கைதுசெய்யப்பட்ட செய்தியை உடனடியாக வெளியிடுமாறு, தமக்கு நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளர்களுக்கு முன்னரே சரத் பொன்சேகா அறிவித்திருந்ததாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், ஜகத் ஜயசூரிய உட்பட வீட்டார் கைதுசெய்யப்பட்ட அச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்~வுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜகத் ஜயசூரிய, இதுகுறித்து தகவலளித்துள்ளார். அதன்பின்னர், இராணுவக் காவல்துறையினருடன் உடனடியாக தொடர்புகளை மேற்கொண்ட கோதாபய ராஜபக்~, கைதுசெய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் இராணுவத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

அரசியல் வழியிலேயே தீர்வு - கே.பி.

விடுதலைப் புலிகள் இனி ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்டத்தில் இறங்கமாட்டார்கள் என்றும், இனி அரசியல் ராஜதந்திர நடவடிக்காகள் மூலமே தமிழர் உரிமையை மீட்டெடுப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் இணையத்தளத்தில் எழுதியுள்ள வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது:

அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்துள்ளது.

மக்களின் தற்போதைய கடினமான வாழ்க்கை நிலையை முன்னிறுத்தியும், அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குதல்கள், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் உள் / வெளி சூழல்கள் போன்றவற்றினை கவனத்தில் கொண்டும் இம் முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்துள்ளது.

இதன் அடிப்படையில், முள்ளிவாய்க்காலில் வைத்து நமது தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, நமது விடுதலை இலட்சியத்தினை வென்றெடுப்பதற்கான அடுத்த கட்டப் பயணம் அரசியல், இராஜதந்திர வழிமுறைகளினூடே தொடரும்.

நாம் நமது புதிய அரசியல் இராஜதந்திரப் பாதையினை அறிவித்த பின்னர் என்னிடம் உரையாடிய சிலர் என்னிடம் கேட்ட முக்கியமான இரு கேள்விகளை ஆராய்வது இந்த வாரப் பக்கங்களுக்கு முக்கியமாகப்படுகிறது.

ஆயுதப் போராட்டம் கிடையாது!

அரசியல் இராஜதந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளை கெரில்லாப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாதா?

அது சிறிலங்கா அரசுக்கு கூடுதல் அழுத்தத்ததைக் கொடுத்து, அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்குப் பக்க பலமாக அமையும் அல்லவா?

-இவையே அந்தக் கேள்விகள்.

முதலில், நான் ஒரு விஷயத்தினைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிற்பாடு, அரசியல் இராஜதந்திரப் பாதையில் பயணத்தினைத் தொடர்வது என்ற முடிவினை நான் மட்டும் தனித்து எடுக்கவில்லை. களத்தில் நிற்கும் தளபதிகள் மற்றும் தொடர்பில் இருந்த ஏனைய துறைசார் போராளிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தற்போதைய அனைத்துலக ஒழுங்கில் நாம் அரசியல் இராஜதந்திரப் பாதையில் பயணிக்கும் அதேவேளையில் ஆயுதப் போராட்டத்தினையும் சமநேரத்தில் முன்னெடுப்பது முரணான இருதிசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாக இருக்கின்றது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரினை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும்.

நாம் ஒரு பேச்சுக்கு கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட முனைகிறோம் என வைத்துக் கொள்வோம்.

அதன் விளைவுகள் எத்தகையவையாக இருக்கும்? சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம். இந்த தாக்குதல் முனைப்புக்களை சிறிலங்கா அரசு தனது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தவே பயன்படுத்தும்.

இதன் உடனடித் தாக்கம் இன்று தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பில் பாதகமாகப் பிரதிபலிக்கும்.

அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக சிங்கள அரசினால் தடுத்து வைக்கபட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், சித்திரவதைகளுக்குட்பட்டும் வருகின்ற 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகள் பாதுகாப்பு மிகுந்த கேள்விக்குறியாகும்.

மக்கள் தத்தமது இடங்களில் இயன்றளவு விரைவாக குடியமர்த்தப்படுவதற்குரிய அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை முன்னெடுப்பது பலவீனமடைந்து, மக்களை நீண்டநாட்களுக்கு தடுப்பு முகாம்களுக்கள் முடக்குவதற்கு வழிகோலும்.

இது ஏற்கனவே மிகுந்த வேதனைக்குள்ளாகியிருக்கும் மக்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்கும். இந்த மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டி எழுப்புவதற்கு ஆதாரமாய் நிற்கவேண்டியது தமிழீழ தேசத்தின் கடமை.
இந்நிலையில் மக்கள் தமது சொந்த இடங்களில் விரைவாக குடியமர்வதற்கு நாம் எந்த வகையிலும் இடையுறாக இருக்க முடியாது.

மேலும், மக்களை தடுப்பு முகாம்களுக்குள் முடக்கியபடி வன்னிப்பெரு நிலத்தின் குடிசனப்பரம்பலை குடியேற்றங்கள் மூலமும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலமும் தமிழ்ப் பெரும்பான்மையற்ற முறையில் மாற்றியமைத்திட முனையும் சிறிலங்கா அரசுக்கு நாமும் துணை புரிவதாய் அமைந்து விடும்.

தமிழர் பிரதேசங்களை மிக நீண்ட நாட்களுக்கு இராணுவ ஆக்கிரமிப்பக்குள் வைத்திட முனையும் சிறிலங்கா அரசுக்கு நாமே வாய்ப்புக்களை வழங்குவதாய் அமைந்து விடும்.

அனைத்துலக அரங்கில் நமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக பரப்புரைகளையும் இராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டு நமது விடுதலைப்போராட்டக் கட்டமைப்புக்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளை இலகுவாக்கிவிடும்.

இவை மட்டுமன்றி, அரசு அல்லாத தரப்புக்களின் ஆயுதப்போர் பற்றிய இன்றைய உலக அணுகுமுறையினால் எம்மால் எவ்விதமான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கவோ அல்லது அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்கு எதிரானப் பிரயோகிக்கவோ முடியாமல் போகும்.

மாறாக, நாங்கள் இதுகாலவரை எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் நிகழ்த்திய ஆயுதம் தரித்த விடுதலைப் போர் ஏற்படுத்தித் தந்த அடித்தளத்தில் இருந்து அடுத்தகட்ட ஈழப்போரினை முன்னெடுப்பதே சமகால உலக உறவுகள், அரசியல் - பொருளாதார நிலைப்பாடுகளின் வெளிச்சத்தில் வெற்றிக்கான வழித்தடமாக இருக்கும்.

அந்த அடித்தளங்கள் எவை?

எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போர் தமிழீழ மக்களிடையே வலுவான தேசிய எழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய சுயநிர்ணய உரிமை, தாயகம் தேசியம் என்கின்ற அடிப்படை விடயங்களை முதன்மையான விடயங்களாக வலுவாக முன்னிறுத்தியுள்ளது. தாயகத்திலும், புலத்திலும் அரசு, இறைமை என்பன போன்ற விடயங்களில் புரட்சிகரமான சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள தேசியவாத அரசின் செல்வாக்கிற்கு வெளியே தேசிய இனச்சிக்கலை கையாளும் வாய்ப்புக்களை உருவாக்கியது. உலக தமிழ்ச் சமூகம் மத்தியில் தமிழீழம் சார்ந்த ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்தியது. இவ்வாறு இந்த அடித்தளங்களை பட்டியலிடலாம்.

அனைத்திலும் மேலாக அர்ப்பணிப்புக்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர் விடுதலைப் போர் என்கின்ற தார்மீகம் எங்கள் அரசியல் நிலைப்பாட்டினை ஆதரமாக தாங்கியுள்ளது. இந்த இடத்தில் இருந்து போராட்ட வடிவத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றியே நாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

போராட்ட வடிவங்கள் மாறும்!

இங்கு போராட்ட இலக்கு மற்றும் போராட்ட வடிவம், இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்த தெளிவான பார்வை முக்கியமானது. நமது போராட்ட இலக்கினை அடைந்து கொள்ள எத்தகைய போராட்ட வடிவம் கூடுதல் பயன் தருமோ அந்த வடிவங்களை நாம் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்த வேண்டும். இதையே நமது தலைவர் 1987 ஆம் ஆண்டில் போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய காலகட்டத்தில், போராட்ட இலக்கினை முன்நோக்கி நகர்த்துவததற்கு போராட்ட வடிவத்தினை மாற்றுவது தவிர்க்க முடியாதது.

நாம் மக்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பது மிகவும் அவசிமானதாகும். இந்த அடிப்படையிலேயே போராட்ட வடிவமாற்றமும் முக்கியமானதாகும்.

சர்வதேச நெருக்கடிகள்…

நாம் முன்னர் ஆயுதப்போராட்டத்தை நடத்தியவாறு தானே அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்தோம் என்ற கேள்வி சிலர் மத்தியில் இந்த தருணத்தில் எழலாம்.

உண்மைதான். ஆனால் முன்னர் இருந்த சூழலுடன் தற்போதைய சூழலை நாம் ஒப்பிட முடியாது. 1970-களில் ஒற்றைத் துப்பாக்கியுடன் நமது தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட நமது விடுதலை இயக்கம் எத்தனையோ சோதனைகள் வேதனைகள் தாண்டி, இமாலய சாதனைகள் புரிந்து வரலாற்றில் ஈட்டிய வெற்றிகள் ஊடாகவே நமக்கு அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் திறந்தன.

இருந்தும் அனைத்துலகத்தின் நலன்களும் நமது நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்காமையால் திறக்கப்பட்ட அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் ஊடாக நம்மை நன்மைகள் பெரியளவில் வந்தடையவில்லை. இறுதியில் சிங்கள அரசு அனைத்துலக சமூகத்தை தன்வசப்படுத்தியவாறே போரை முன்னெடுத்தது.
நமக்கு திறக்கப்பட்டிருந்த அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் ஊடாக நம்மை நன்மைகள் வந்தடையாமைக்கு அடிப்படையில் இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

1. தெற்காசியாவிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்த கொள்வதே உசிதமானதாகக் கருதியமை. இது தமிழீழம் என்ற நமது இலட்சியத்திற்கு எதிரான உலக நிலைப்பாட்டுக்கு வழிகோலியது.

2. இலங்கைத் தீவில் ஆயுதப் போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வரவேண்டும் என்பதிலும் அனைத்துலகம் ஒரே கருத்துக்கு வந்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்திற்கும் உலக ஆதரவினை திரட்டுவது சாத்திமற்றதாக இருந்தது.

நாம் தற்போது நமது தாயகச் சூழல் கருதியும் அனைத்துலக நிலைமைகளை மதிப்பீடு செய்தும் நமது விடுதலை இலட்சியத்தில் உறுதியாக நின்று கொண்டு போராட்ட வடிவத்தை மாற்றுகிறோம்.

இதன் ஊடாக உலக நலன்களுடன் நமது நலன்கள் முரண்படும் மேற்குறிப்பிட்ட இரு விடயங்களில் ஒன்றினில் முரண்பாட்டைத் தவிர்க்கிறோம். உலகம் தற்போது ஏற்க மறுப்பதற்காக நமது தமிழீழ இலட்சியத்தில் இருந்து நாம் பின்வாங்க முடியாது. வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
இந்த மாற்றங்கள் ஈழத் தழிழ் மக்களின் விடுதலைக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கான நிலைமைகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்களையும் கொண்டுவரும்.

இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்ளும் உலக சக்திகளின் புவிசார் அரசியல் தோல்வியினை அடையும் சூழலும் இந்த மாற்றங்களின் ஊடாக உருவாகும். அப்போது நமக்கான தமிழீழ தேசத்தை நாம் அமைத்துக் கொள்வதற்கான நிலைமைகளும் உருவாகும். இந்த நம்பிக்கையுடன் நமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாக நாம் முன்னெடுக்க வேண்டும்.

அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாக பயணம் செய்வது என்பதும் இலகுவான ஒரு விடயம் அல்ல. பல சவால்களையும் எதிர்கொண்டு மிகுந்த சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணம் இது, என அவர் எழுதியுள்ளார்.

Sunday, July 19, 2009

ஜாதகத்தால் பறிபோன சரத் பொன்சேகாவின் பதவி

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் அரசாங்கத்திற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சரத் பொன்சேகா அந்தப் பதவியிலிருந்து அவசரமாக துரத்தியடிக்கப்பட்டமை தொடர்பாக தற்போது அரசியல் மற்றும் இராணுவத் துறைகளில் பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இதேவேளை, சரத் பொன்சேகாவிற்கு இராஜ யோகம் இருக்கின்ற தகவல் வெளிவந்ததை அடுத்து அவர் இராணுவத் தளபதியிலிருந்து ஜனாதிபதியினால் விரட்டியடிக்கப்பட்டதாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரொருவர் தமது சகாக்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்~வினால் ரம்புக்கன பிரதேசத்திலுள்ள பிரபல சோதிடரொருவரிடம் சரத் பொன்சேகாவின் ஜாதகம் கணிக்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், ஜாதகத்தின் பலாபலனே சரத் பொன்சேகாவின் பதவி பறிபோக காரணியமாக அமைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்~, ரம்புக்கன தேரர் என அழைக்கப்படும் பிரபல சோதிடரைச் சந்திக்க வாரியபொல பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். கம்பஹா காணி சொத்துவிற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் குறித்த சோதிடரின் மிகவும் வேண்டப்பட்டவர் என்பதனால் அவரையும் பசில் ராஜபக்~ இந்த இரகசியப் பயணதின்போது அழைத்துச் சென்றுள்ளார்.

தனது மற்றும் ஜனாதிபதியின் ஜாதகங்களின் பலாபலன்களைக் கேட்டறிந்த பசில் ராஜபக்~ சற்று குழப்பமடைந்த நிலையில், மூன்று ஜாதகக் குறிப்புக்களை தேரரிடம் கொடுத்து, இந்தக் குறிப்புக்களின் பலாபலன்களையும் அறிந்து கூறுமாறு கேட்டுள்ளார்.

அந்தத் தேரர் சற்று சுகயீனமுற்றிருந்த போதிலும், பசில் ராஜபக்~வின் வேண்டுகோளை மறுக்க முடியாத நிலையில், நீண்ட நேரத்திற்குப் பின்னர் அந்த ஜாதகக் குறிப்புக்களைக் கணித்துக் கூறியுள்ளார். இதன் காரணமாக பசில் ராஜபக்~விற்கு கிதுல் சக்கரையுடன் பல தடவை தேனீர் அருந்த நேரிட்டுள்ளது.

ஜாதகக் குறிப்புக்களைப் பெற்றுக்கொடுத்த சந்தர்ப்பத்தில் அது யாருடையவை என பசில் ராஜபக்~ குறிப்பிடாத போதும் அதனைப் பெற்றுக்கொண்டு சிறிது நேரத்தில் அதில் ஒரு குறிப்பைக் காட்டி இது இராணுவத் தளபதியின் ஜாதகக் குறிப்பு தானே என தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை மறுக்க முடியாத நிலையில் உண்மையை ஏற்றுக்கொண்;ட பசில் ராஜபக்~ ஏனைய இரண்டு ஜாதகக் குறிப்புகள் யாருடையது என்ற பெயரை வெளியிடாது இவை உறவினர்களுடையது எனக் கூறியுள்ளார்.

பின்னர் ஜாதகக் குறிப்பைக் கணித்த தேரர், 1950ம் ஆண்டு டிசம்பர் 18ம் திகதி 2.06க்கு அம்பலான்கொடயில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சரத் பொன்சேகா துலா இராசி எனவும், மிகுந்த அதிஸ்டமிக்க இந்த நபர், எந்தவொரு எதிரியையும் அச்சமின்றி வெற்றிக்கொள்ளும் அதிஸ்டம் கொண்டவர் எனக் கூறியுள்ளார்.

அத்துடன், சரத் பொன்சேகாவின் ஜாதகத்திற்கமைய அவர் பெற்றுக்கொள்ளும் வெற்றிகளை ஏனையோர் பறித்துக்கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், இந்த நபர், எவரும் எதிர்பாராத வண்ணம் மக்கள் குலத்திற்குத் தலைமை வகிக்கும் பலம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள தேரர், 2009 செப்டம்பர் 9ம் திகதிக்குப் பின்னர் தமது ஜாதகத்தின் பலம் உச்சமடைந்து நாட்டின் அரசாழும் மிகப்பெரிய யோகம் பெற்ற பாக்கியவான் எனவும் தேரர் கூறியுள்ளார்.

அத்துடன் நினைத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரையில் முன்வைத்த காலை பின்வைக்காத குணாதியம் கொண்ட மிகவும் தன்னம்பிக்கையுடை பலாபலன்களை இந்த ஜாதகம் கொண்டுள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.

இதேவேளை, பசில் ராஜபக்~வினால் வழங்கப்பட்ட ஏனைய இரண்டு ஜாதகங்களின் பலன்களும் உச்சத்தில் இருப்பதாக தேரர் தெரிவித்ததாகவும், பலம் உச்சத்தில் உள்ள சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ இவ்வாறு திடீர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ஏனைய இருவரின் நிலை என்னவாகப் போகின்றதோ எனத் தெரியாதுள்ளதாகவும் தகவலளித்துள்ள அந்த அமைச்சர் தமது சகாக்களிடம் மேலும் கூறியுள்ளார்.