Friday, December 18, 2009

மாமா மகிந்தாவிற்கு மருமகன் சனீஸ்வரன் எழுதும் உரிமை மடல்

அன்புள்ள மாமா உமது புண்ணியத்ததால் இவ்விடம் நானும் இன்ன பிற ஜந்துகளும் (யாழ்ப்பாணத்தில் உமது ஆட்சியின் கீழ் இருப்பவர்களை இப்படியும் அழைக்கலாம்) நலம். அதுபோல் உமது நலனையும் ஆந்திரா பெருமாள் காப்பாராக (பெருமாளை யார் காப்பாரோ)

மாமா! வெற்றிக்களிப்பில் இருக்கும் உங்களை நான் (சனி) பற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன். துணிச்சல் மிகுந்த உங்கள் செயற்பாடுகளால் இலங்கையில் சிறுபான்மை என்ற இனத்தையே இல்லாது செய்துவிட்டீர்கள். தமிழ் பேச முயற்சிப்பதன் மூலம் இப்போது எமது மாமாவாகவும் ஆகிவிட்டீர்கள். வெல்டன் மாமா வென்றுவிட்டீர்கள். உலகின் நான்காவது பெரிய படையாலேயே வெல்ல முடியாத பிரபாகரனை தடம் போட்டு பிடித்து வென்றுவிட்டீர்களே மாமா! அதென்ன மாமா மகிந்த சிந்தனை கண்டறியாத மகிந்த சிந்தனை. இப்ப இந்த சனீஸவரன் சிந்தனையை கேளுங்கோ மாமா. பிரபாகரன் இருக்கும் வரைதான் மகிந்த சிந்தனையும் மயிராண்டி சிந்தனையும்.

ஆறுவருசம் ஆண்டு போட்டீர்கள் மாமா. உங்களுக்கெண்டு தேடியது என்னதான் மாமா. தம்பி சகோதரங்கள் நல்ல கொள்ளையடிக்க நீங்கள் பாத்துக்கொண்டிருந்ததுதான். தம்பிமாரை வாழ வைச்சு என்ன மாமா? உங்கடை பிள்ளையளை வாழ வைக்கவேணும் மாமா இனி ஆறுவருசமும் நீங்கள்தான் மாமா தனிக்காட்டு ராஜாவாக நின்று எல்லா வளங்களையும் சுருட்ட வேணும். புலி இருந்த காலத்திலை தம்பிமாற்றை உதவி தேவைதான் மாமா. அதுதான் துணிவா சண்டையும் பிடிச்சீங்கள் இல்லையெண்டு சொல்லேல்லை. அதுதான் முடிஞ்சு போச்சுதே “தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்”தான் மாமா ஆனால் அது சண்டை பிடிக்கிற நேரம்தானே மாமா! இப்பதான் சண்டையே இல்லை இனி எதுக்கு மாமா தம்பி. போட்டுத்தள்ளுங்க மாமா. தம்பி சகோதரங்களாலேயே உங்கள் பதவிக்கு ஆப்பு வரலாம் போலிருக்கிறது மாமா. தமிழில் ஒரு பாட்டு இருக்கிறது மாமா “ அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்று அதனாலை இந்தநேரத்திலை அவங்களை போட்டுத் தள்ளிப்போட்டு என்ரை மருமகன் நாமல் தம்பியை இராணுவ தளபதி ஆக்குங்க மாமா என்ன இருந்தாலும் அவன் உங்கடை ரத்தம்தானே மாமா. அழகுராணி மாமியை பிரதமரா ஆக்குங்கோ மாமா அலரி மாளிகையே ஒரு கிளு கிளுப்பாயிருக்கும் மாமா. கிழட்டு விக்கிரமஸ்ரீயையும் போட்டுத் தள்ளுங்கோ மாமா!.

மாமா! ஒரு ரகசியம் சொல்லுறன் கேளுங்கோ காதைக்கிட்டவா கொண்டு வாங்கோ! உவன் கருணா பிள்ளையான் ஆக்கள் ரொம்ப ஆபத்தானவங்கள் மாமா! அந்த பிரபாகரனோடை ஒரு கோப்பையிலை திண்டு குடிச்சு கிடந்தவங்கள் உறவாடி மகிழ்ந்தவங்கள். பிரபாகரன் உவன் கருணா வாறான் எண்டால் செக் பண்ணக்கூட விடுகிறதில்லையாமெல்லே. அப்பிடி தேனும் பாலுமா இருந்தவனையே காட்டிக் குடுத்தவங்கள் மாமா உந்த பிரம்ம சக்தியளும். கவனம் மாமா நாளைக்கு அவன் சரத் வந்து ஏதேனும் கூட கூட்டிக் குடுக்கிறன் எண்டால் மாறி நிண்டு உங்களைப் போட்டுடுவான்கள். கவனம் மாமா கெதிப்பண்ணி உவன்கள் இரண்டு பேரையும் போடுற வழியைப் பாருங்கோ. உவங்களுக்கு சகல ஆயுதங்களும் இயக்கத் தெரியும் அவங்கள் உங்களுக்கு ஆப்படிக்க முன்னம் நீங்கள் அவன்களுக்கு ஆப்படிச்சிடுங்கோ மாமா!

மாமா இன்னொருத்தன் மிச்சம் பொல்லாதவன் மாமா! காரைநகர் கடற்படைத்தளம் தாக்கியழிச்ச டக்கண்ணாவைத்தான் சொல்லுறன் மாமா! அவன் உங்கடை மட்டக்களப்பு சிறை யுடைச்சு தப்பினவன் மாமா! ஆட்டோக்காரன் காசு கேட்டதிற்கே போட்டுத் தள்ளினவன் மாமா! நாளைக்கு நீங்கள் ஏதும் வசந்தக் கணக்கு கேட்டால் உங்களையும் போட்டுடுவான் மாமா! மத்தியிலை கூச்சி மாநிலத்திலை பேச்சி என்றெல்லாம் புலுடாவிட்டு உங்கடை இமேஜை ஸ்பாயில் செய்யப் போறான் மாமா. போடுங்கோ மாமா அவனுக்கு அடுத்த ஆப்பை. என்னமோ சனாதிபி தேர்தலுக்கு 15 டிமாண்ட வைக்கிறானாம் இவன் ஆர் மாமா உங்களுக்கு டிமாண்ட் வைக்க. உங்கடை எச்சில் சோத்தை நம்பி வாழுற இவங்களை இனி தலையெடுக்க விடலாமோ.. சித்தார்த்தன் ஸ்ரீதரன் எல்லாம் உங்களக்கு ஜூஜிப்பி மாமா! அவங்களை வேண்டுமானால் உங்கடை மோன் நாமலைக் கொண்டு போட்டுத் தள்ளுங்கோ மாமா!

இப்ப யோசிப்பியள்! எல்லா தமிழ் அரசியல் தலையளையெல்லாம் போட்டுட்டு யாரை வச்சு அரசியல் செய்யிறதெண்டுதானே? ஏன்மா எங்கடை அறிக்கை அனந்த சங்கரிதான்மாமா உங்களுக்கு சூட்டபிளா இருப்பார். எழும்பி நடக்கேலாத ஜென்மம், ஆயுதம் எங்கை தூக்கப்போறார். இவர்தான் மாமா உங்களை தூக்கி நிறுத்தப் போறவர். இவரைப் போல ரண்டு மூணு கிழடுகளாப் பாத்து தமிழ் புத்தி சீவிகள் எண்ணு சொல்லிக் கொள்ளுற எழும்பி நடக்கேலாத பேராசிரியர்களாக சிலரையும் பிடிச்சு தமிழ் அரசியல்வாதி வெற்றிடங்களை நிரப்பலாம்தானே மாமா.

என்னமோ மாமா சொல்லுறதை சொல்லிப்போட்டன். காலைச்சுத்தின பாம்பு கடிக்காமல் விடாது. கழுத்திலையும் சிவப்பு துணி போட்டுக் கொண்டு திரியுறியள். பிடிச்சு நெரிச்சுப் போடுவங்கள். ஆரையும் ஆயுதம் தூக்கினவங்களை நம்பாதீங்க மாமா. ஒண்ணா மண்ணா இருந்தவங்களையே காட்டிக் கொடுத்த சாதி வெளுத்த தெல்லாம் பால் என்டு நினைக்கிற உங்களை சும்மா விடுவங்களே! கவனம் மாமா. தமிழிலை கொலையும் செய்வாள் பத்தினி எண்டு ஒரு பழமொழி இருக்குது நான் சொல்லத்தேவையில்லை மாமியிலையும் ஒரு கண் வச்சிருங்கோ.
சரி மாமா நிறைய எழுதிப் போட்டன். மேற்கொண்டு உங்கடை விருப்பம்.

யாழ்ப்பாணத்திலிருந்து
அன்பு மருமகன்
சனீஸ்வரன்

Monday, December 7, 2009

இலங்கையின் கிழக்கு பகுதியில் புதிய போராட்டக்குழு

பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் மற்றும் கியூபாவுடன் தொடர்புடைய மார்க்ஸீசிய தமிழ் போராட்டக் குழு, இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்களின் பின்னர் கிழக்குப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு புதிய அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) என்ற அமைப்பு ஒன்று கிழக்கு மாகாணத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததாகவும் இது தனித் தமிழ் நாடு ஒன்றை கோரி அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவிருப்பதாகவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் விடுதலை இராணுவத்தின் கட்டளைத் தளபதி என கூறும் கோணேஸ் என்பவர், இந்த யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்திருப்பதாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களுக்கு உண்மையில் தீர்வு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ள அவர், இதன் நிமித்தமே இந்த இராணுவத்தை தொடக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தாம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, வடக்கிழக்கு மாகாணத்தை தனி தமிழ் ஈழமாக மீட்போம் என அவர் டைம்ஸ் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மக்கள் விடுதலை இராணுவம் விரைவில் தமது தாக்குதல்களை ஆரம்பிப்பர் எனவும் தமக்கு தெரிவித்துள்ளதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை தாம் தமீழ விடுதலைப் புலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இராணுவக் குழு என தெரிவித்துள்ள கோணேஸ், எனினும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் இதில் இணைந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Thursday, December 3, 2009

துரோகி கருணாவின் வாகன விபத்து: கொலை முயற்சியா?


விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து அவ்வியக்கத்தை பலவீனப்படுத்தி , பின்னர் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது, புலிகளின் யுத்திகள் பலவற்றையும், இரகசியங்களையும் அரசாங்கத்திற்கு கூறி மகிந்தவின் செல்லப்பிள்ளையாக இருந்த கருணாவை இப்போது எந்த அரசாங்க அமைச்சர்களும் கண்டுகொள்வது இல்லை. புலிகளை யுத்தரீதியாக அரசாங்கம் வெற்றிகொண்ட பின்னர் இவரை இலங்கை அரசு தற்போது ஓரங்கட்டிவிட்டது என்பதே உண்மை.

கருணாவிற்கு தற்போது புதிய தலைவலியும் ஆரம்பம். சமீபத்தில் இவர் வாகனம் பெரும் விபத்தில் சிக்கியது யாவரும் அறிந்ததே. முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றவேளை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டாலும், இதில் பல விடயங்கள் பின்னணியில் இருக்கலாம் என செய்திகள் கசிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பில் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள பொலீஸ் நிலையத்தில் விபத்தில் சிக்கிய கருணாவின் வாகனம் இருப்பதை கண்டறியப்பட்டது

கருணாவின் வாகனம் முன் பக்கமாக சேதமடைந்ததை விட பயணிகள் பயணிக்கும் பின் பக்கம் கூடுதலாகச் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது, இவரது வாகனம் மோதவில்லை, மாறாக இவர் வாகனம் மேல் வேறு ஒரு வாகனம் வேகமாக வந்து மோதியதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரிகிறது. அப்படியாயின் கருணா வாகத்தின் மீது யார் வாகனம் வந்து மோதியிருக்கும். இது ஒரு கொலை முயற்சியா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

இது ஒருபுறம் இருக்க அந்த விபத்து நடந்த நாள் முதல் கருணா ஏன் அறிக்கைகள் எதனையும் விடவில்லை, அவர் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்படுவதுடன் அவர் எங்கு இருக்கிறார் என்பது போன்ற விபரங்களும் வெளியிடப்படுவது இல்லை. விபத்தில் சிக்கிய கருணா தற்போது மிரண்டு போயுள்ளார் என சிலர் அரசல் புரசலாக பேசுகின்றனர். கோத்தபாயவுடன் நெருங்கிய உறவைப் பேணிவரும் ஒரு அமைச்சருக்கும் கருணாவிற்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் உச்சக்கட்டமே இந்த விபத்து எனவும் கூறப்படுகிறது.

அடுத்தவருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அதனைத் தொடர்ந்து அமையவிருக்கும் புது அமைச்சரவையில் கருணாவுக்கும் இடம் உண்டா என்பதே தற்போதைய கேள்வி. காரியம் ஆகியவுடன் சரத் பொன்சேகாவையே களற்றிவிட்ட மகிந்தவின் அரசிற்கு கருணா எம்மாத்திரம்?..