Monday, October 5, 2009

கொழும்பு தாக்குதல்களுடன் சதாசிவம் கனகரத்தினத்திற்கு தொடர்பு? - இலங்கையின் புது கதை

கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் தொடர்புபட்டிருப்பதாக சிறீலங்கா அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் பெயர்குறிப்பிடாத சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களின் புதல்வரான கிரி என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்றும், லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை உட்பட கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்புக்கள், தாக்குதல் சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மாடிவெல பகுதியில் அமைந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களின் வாசத்தலத்தை இவ்வாறான தாக்குதல்களுக்கான தளமாக அவரது புதல்வர் பயன்படுத்தியதாகவும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் மூத்த அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இறுதிவரை வன்னி மக்களுடன் நின்று அவர்களுக்காக குரலெழுப்பியமைக்காக கடந்த நான்கரை மாதங்களாக திட்டமிட்டவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களை சிறீலங்கா அரசு தடுப்புக் காவலில் வைத்துள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

Friday, October 2, 2009

தலைவரின் உடலை ஒத்த அந்த உடல் சூசைராஜ் என்கிற போராளியுடையது

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!" என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?" என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம் பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!

அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், ‘நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!" என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.

கடைசி வரை களத்தில் நின்ற ‘கரிகாலன்!'

மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள்.

ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.

சார்லஸ் என்ற குலக் கொழுந்து!

தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், ‘நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!' என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், ‘மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்' என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள்.

கடைசி நாளில்…

அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட… அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!' என்று நிறுத் தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். “மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.

அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்' என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்

அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்.

ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.

அந்த உடல்…

ஈழத்தையே முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.

அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல ராணுவம் காட்டுகிறது.

மாவீரர் தினத்தில்… வருவார் !!!

ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க' தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!' என்கிறார்கள் உறுதி குறையாமல்.

நன்றி தமிழ் தேசியம்

Thursday, October 1, 2009

ஹிட்லரை விடவும் மோசமானவர் ராஜபக்ஷே -அமெரிக்க டாக்டர் எலின் சான்டர்

''தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும். பொறுத்திருந்து பாருங்கள்!'' இவ்வாறு அமெரிக்காவில் இருக்கும் சான்டர் தொலைபேசி ஊடாக ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டாக்டர் எலின் சான்டர்.போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டாக்டர்; கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார்.

வட அமெரிக்காவில் ஒரு மாநாட்டில், இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து, 'எலின் சான்டர் வெள்ளைக்கார தமிழச்சி' என்று வியந்தார்! இலங்கை அகதி முகாம்களில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கக் கோரி மெக்ஸிகோ நகரில் கடந்த 22-ம் தேதி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார், எலின் சான்டர்.

இவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து ஒரு கருத்தரங்கத்தில் பேச வைக்க வைகோவும், மா.நடராஜனும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசு இவருக்கு விசா வழங்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜூனியர் விகடன் செய்தியாளர் தொடுத்த வினாக்களும், சான்டர் வழங்கிய பதில்களும்:-

''இந்திய அரசால் உங்கள் விசா கடைசி நேரத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறதே..?''

''உண்மையில் இந்தியாவுக்கு வர ஒரு மாதம் முன்பே விசா கிடைத்து விட்டது. ஆனால், நான் புறப்படும் இரு தினங்களுக்கு முன்பு, விசா கேன்சல் (cancel) செய்யப்பட்டதாக போன். இந்தியாவில் இருக்கும் ஒரு மத்திய தமிழ் மந்திரியின் வற்புறுத்தலின் பேரில்தான் விசா கேன்சல் என கூறினார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

உலகில் வேறெங்குமே நடக்காத ஒரு கொடூரம், தமிழகத்திலிருந்து வெகு அருகில் உள்ள இலங்கையில் நடந்தும், அதற்க்கான எதிர்ப்பு இந்தியாவிலிருந்து எழவில்லை. இதற்கு பதில் கேட்கத்தான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். கடைசியில் தடுக்கப்பட்டேன். ஆனாலும் நான் இந்தியா வர போராடுவேன்..!''

''அமெரிக்கரான நீங்கள் அகதி முகாம்களில் வாடும் அப்பாவி தமிழர்களுக்காக போராட முன்வந்தது ஏன்?''

''இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி முகாமில் அடைத்து வைக்கப்பட்டு, பெரும் சித்ரவதைகளுக்குப் பிறகு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்தேன். தனிமரமானேன். உலகின் எந்த மூலையில் ஒரு குறிப்பிட்ட இனம் கொடுமைப்படுத்தப்பட்டாலும், அது என்னை பாதிக்கும். அந்த வலி தெரியும். முன்பு இலங்கையில் சுனாமி நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். அப்போது தமிழீழ மக்களின் அன்பும், மன தைரியமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களின் சொந்தக்காரியாகவே என்னை நினைக்கிறேன்.

இனப்படுகொலையால் அங்கே இறந்த ஈழத் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொருவரும் மகன், அப்பா, அம்மா என உறவுகளை இழந்து தவிப்பது பேரவலம். மே மாதத்தில் மட்டும் 30,000 அப்பாவி மக்களை தமிழினம் இழந்தது. பல்லாயிரக்கணக்கானோர், முடமாகியும் அநாதையாகியும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக நான் போராடுவதுதான் மனித நேயத்துக்கான சரியான அடையாளம்.''

''இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் உங்களுக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?''

''ஆம். பருவ மழை தொடர்ந்து பெய்வதால், இப்போது அகதி முகாம்களில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அம்மை நோய் பரவுகிறது. உணவு, சுகாதாரம் எதுவுமே அங்கே சரியாக இல்லை. வாரத்துக்கு 1,500 பேர் கொல்லப்பட்டு, முகாமின் வேலிகளுக்கு வெளியே திறந்த வெளியில் வீசப்படுகிறார்கள். யாராவது கேட்டால் சித்ரவதை செய்து கொன்று அவரையும் வீசிவிடுகிறார்கள். பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதோடு, உடைகளே தராமல் பிறந்த மேனியாக அலையவிட்டிருக்கிறார்கள்.

யுனிசெஃப்பின் வவுனியா மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் சிங்கள மருத்துவர்கள் ஊசி போட்டுக் கொன்று வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. எவரையும் தங்கள் குடும்பத்தோடு வைக்காமல், வெவ்வேறு முகாம்களில் பிரித்து, கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதுவரை முகாமில் 10 ஆயிரம் மக்கள் காணாமல் போயிருக்கின்றனர். எங்கு சென்றனர், என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை! என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே இதுதான் மிகப்பெரிய, கொடிய சிறைச்சாலை!''

''செஞ்சிலுவை சங்கத்தினருக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பும் மரியாதையும் இலங்கையில் கிடைக்கிறதா?''

''பல்வேறு பத்திரிகையாளர்களும், மனித உரிமைக் குழுவினரும் இலங்கையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது உலகத்துக்கே தெரியும். யுனிசெஃப், செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு துளிகூட பாதுகாப்பு கிடையாது. பல்வேறு யுனிசெஃப் பெண் பிரதிநிதிகள்கூட பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

போரில் சிக்கி உயிரிழந்தார்கள் என்று இலங்கை அரசு சொன்ன உதாரணங்களும் நிறைய இருக்கிறது. ஹிட்லரை விடவும் மோசமானவர் ராஜபக்ஷே. அதை நிரூபிக்கும்படியான சம்பவங்கள்தான் இலங்கையில் நடந்துகொண்டே இருக்கின்றன!''

''இலங்கை நிலவரம் குறித்து, ஒபாமா அல்லது ஹிலாரி கிளிண்டனிடம் பேசினீர்களா?''

''இருவரிடமும் பேசும் வாய்ப்பு அமையவில்லை. அமெரிக்க ஸ்டேட் செக்ரெட்டரி ராபர்ட் பிளேக்கிடம் இது குறித்து விரிவாகப் பேசினேன். அவர், ஒபாமாவிடம் பேசுவதாக கூறினார். விரைவில் இந்தப் பிரச்சினை குறித்து மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக என்னிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார் ராபர்ட்.''

''நீங்கள் பேசிய ஒரு சி.டி-யில் 'தமிழீழம் மலரும்' என்று கூறியுள்ளீர்கள். அதற்கான சாத்தியக்கூறு என்ன?''

''தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. இலங்கையை முழு சிங்கள தேசமாக மாற்றலாம் என்று வெறித் தாண்டவம் ஆடும் ராஜபக்ஷேவுக்கு, உலக நாடுகளிடமிருந்து மிகப்பெரிய கண்டனங்களும் ஆபத்துகளும் இனித்தான் வரப்போகின்றன.

குறிப்பாக, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும். பொறுத்திருந்து பாருங்கள்!''

''உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''

''கண்ணி வெடிகளைக் களையெடுக்கிறோம் என்ற பேரில் சிங்களவரை தமிழர் பகுதியில் குடியேற்றம் செய்துவரும் ராஜபக்ஷேவிடம், அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனே விடுவிக்கக் கோரி உலக நாடுகளை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்த இருக்கிறோம். இனியும் விடுதலைப் புலிகள் என்று அப்பாவி மக்களை சித்ரவதை செய்வதை அனுமதிக்கக் கூடாதென உலக நாடுகள் கிளர்ந்து எழும்.

இலங்கைக்கு செய்துவரும் இராணுவ, வாணிப ரீதியான உதவிகளை முடக்க உலக நாடுகளில் விழிப்பு உணர்வு மாநாடுகள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் இலங்கை அரசு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்!'' என்றார் எலின் சான்டர்.