Sunday, September 6, 2009

ஐ.நா. மூத்த அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அரசு திடீர் உத்தரவு

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த உயர் அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு திடீர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ள சிறிலங்கா அரசு, அதற்காக அவருக்கு இரண்டு வார காலக்கெடுவையும் விதித்திருக்கின்றது. அவரின் 'விசா'வை இரத்துச் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் உடனடியாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத போதிலும், வவுனியா முகாம்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் சீற்றத்தை ஏற்படுத்தியதையடுத்தே இவ்வாறான அதிரடி நடவடிக்கையில் சிறிலங்கா அரசு இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா. சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) ஒரு மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டர் என்பரே இரு வார காலத்துக்குள் சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் வரையில் சிறிலங்காவில் பணிபுரிவதற்கு இவருக்கு 'விசா' உள்ள போதிலும், இந்தத் திடீர் உத்தரவை சிறிலங்கா அரசு பிறப்பித்திருக்கின்றது.

இராஜதந்திர தகுதியுடன் கூடிய ஐ.நா. கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அரசினால் கேட்டுக்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறே இவருக்கு முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் குறிப்பிட்ட ஐ.நா. அதிகாரி கேட்டுக்கொண்டதாலேயே இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெளியேற்றத்துக்கான காரணம் எதுவும் சிறிலங்கா அரசினால் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், குறிப்பாக அங்குள்ள சிறுவர்களின் நிலை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அடிக்கடி கருத்துக்களைத் தெரிவிப்பதாலேயே இந்த முடிவை சிறிலங்கா அரசு எடுத்திருக்க வேண்டும் என தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கான யுனிசெஃப்பின் அலுவலகத்தில் தகவல் தொடர்பு பிரதான அதிகாரியாக ஜேம்ஸ் எல்டர் பணிபுரிந்து வருகின்றார். இவர் அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜேம்ஸ் எல்டரின் விசா காலாவதியாகிவிட்டது எனவும், அவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகாரச் செயலாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் கலாநிதி பாலித கோகன தெரிவித்தார்.

"இது நாடு கடத்தல் அல்ல. இது குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையே இது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் ஜேம்ஸ் எல்டரின் விசாவை இரத்துச் செய்யுமாறு குடிவரவுத் திணைக்களப் பணிப்பாளர் பீ.பி.அபயக்கோனுக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகின்றது.

சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக நியூயோக்கில் உள்ள யுனிசெஃப் தலைமையக அதிகாரி ஒருவர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் நியூயோர்க்கில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Saturday, September 5, 2009

ஜே.ஆர்.இன் வீட்டில் பேரன்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் அவரது பாரியார் ஆகியோரின் மறைவிற்குப் பின்னர் அரசாங்கத்திற்குச் சொந்தமாக வேண்டுமென உறுதி எழுதப்பட்ட வோட் பிளேஸ் இலக்கம் 66இல் அமைந்துள்ள வீட்டில் (டீசயநஅநச) இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை.

இந்த வீட்டில் முன்னாள் ஜனாதிபதியின் பேரனான அம்ரிக் ஜயவர்தன தற்போது வசித்து வருகிறார். கொழும்பு 07, க்ரேகரி வீதியில் இலக்கம் 1ஃ42 என்ற இடத்தில் அம்ரிக்கின் சொந்த வீடு இருந்த போதிலும், தமது பேரின் அவரது வீட்டில் இருக்க வேண்டும் என்ற தாத்தாவின் இறுதி ஆசைக்கமையவும், குடும்பத்தாரின் விருப்பதற்கமையவுமே தற்போதைய வீட்டில் வசித்து வருவதாக அம்ரிக் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சொந்தமாக வேண்டிய இந்த வீட்டின் பெறுமதி சுமார் 100 கோடி ரூபா எனத் தெரியவருகிறது.

மஹிந்தவின் இரகசிய மாளிகை

தனக்கருகில் உள்ளவர்களைக் கொண்டு தன்னை மன்னராகக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, மாத்தறை மாவட்டத்தில் தெனியாய நகரில் மிகவும் இயற்கை எழில்மிக்க இடமொன்றில் ஆடம்பர மாளிகையொன்றை நிர்மாணித்து வருகிறார்.

லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துடன் இந்த இரகசிய மாளிகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் இந்த இரகசிய மாளிகை, அவரது சகோதரியான காந்தினிக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகிலேயே நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. தெனியாய, பெபரேலிய பிரதேசத்தில் மிகவும் அழகான இடமொன்றில் அமைக்கப்படும் இந்த மாளிகையின் நிர்மாணப் பணிகள் பிரபல வாஸ்துசாஸ்திர நிபுணரான சந்தனதாஸ் வத்தவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கமநெகும திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாத்திரமல்லாது, அரசாங்கத்தின் ஏனைய வாகனங்களையும் பயன்படுத்தி இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

அத்துடன், இவ்வாறு அமைக்கப்பட்டு வருவது என்ன என்பது குறித்து கேள்வியாகவே இருந்ததாகவும், கடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் இவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டுவரும் இந்த இரகசிய மாளிகை தொடர்பான தகவல்களைச் சேகரிக்க சென்ற போதே லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனியார் காணியொன்றிற்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று ஊடகவியலாளர்களையும் கைதுசெய்த காவல்துறையினர் மொரவக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுத்துக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொண்டு கொழும்பு அழைத்துவந்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.